பீகாரில் ஆர்ஜேடி, காங், ஜேடியூ இணைந்து புதிய ஆட்சி அமையுமா?பாஜகவின் கனத்த மவுனத்தால் எழும் சந்தேகம்!
பாட்னா: பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதாக முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ஆனால் பாஜக தரப்பு இதுவரை நிதிஷ்குமாரின் இந்த முடிவுக்கு எதிராக கடுமையான ரியாக்சனை காட்டாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Recommended Video
பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. பாட்னாவில் இன்று நடைபெற்ற ஜேடியூ எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ஜேடியூ கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டமும் ஒருமனதாக இம்முடிவை ஆதரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநருடன் நிதிஷ், தேஜஸ்வி சந்திப்பு
இதனையடுத்து லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஜேடியூ புதிய ஆட்சி அமைக்க இருக்கிறது. பாட்னாவில் இன்று மாலை ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இணைந்து சந்திக்க இருக்கின்றனராம்; இந்த சந்திப்பின் போது புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநருடன் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆர்ஜேடி மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி இல்லத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங். எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பாஜகவின் விருப்பம்
பீகாரில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த நிலையிலும் பாஜக, நிதிஷ்குமாருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருக்கிறது. நிதிஷ்குமாரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ஜேடியூ முடிவு செய்திருக்கலாம். ஆனால் நிதிஷ்குமார்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம் என்றார்.

பாஜகவின் மவுனம் ஏன்?
பாஜகவின் இத்தகைய மவுனம் பொதுவாக இயல்பானது அல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பீகார் சட்டசபையில் 77 எம்.எல்.ஏக்களுடன் 2-வது பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது. பீகாரில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். தற்போதைய நிலையில் பாஜக, வேறு ஒரு கட்சியுடன் இணைந்து பீகாரில் புதிய ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியமே இல்லை என்பது யதார்த்தம். அதாவது பாஜகவுக்கு எதிரான ஜேடியூ, காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 160 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த கட்சிகளில் எதுவும் பாஜகவுடன் உடன் கை கோர்க்கப் போவதில்லை. அதனால் பாஜக வேறுவழியே இல்லாமல் மவுனம் காத்திருகக் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

பிளவுபடுமா ஜேடியூ?
அதேநேரத்தில் 45 எம்.எல்.ஏக்களைக் கொண்ட நிதிஷ்குமாரின் ஜேடியூவை இரண்டாக பாஜக உடைக்கக் கூடிய சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை எனவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கிய போல, பீகாரில் ஜேடியூவில் ஆர்பிசிங்கை பாஜக ஏற்கனவே உருவாக்கி விட்டது. ஆர்பிசிங்கும் ஜேடியூவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிவிட்டார். ஆனால் ஆர்பிசிங்குக்கு ஆதரவாக ஜேடியூ எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை என்பது தற்போதைய நிலைமை. என்னதான் ஜேடியூவை கலகலக்கவே வைத்தாலும் பாஜக ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் கிடைக்காது என்பதே கண்ணுக்கு எட்டிய தொலைவிலான நிதர்சனம். இத்தகைய காரணங்களால்தான் பாஜக கனத்த மவுனம் காக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications