ராகுல் மலை போல நம்பினாரே.. சுத்தமாக எடுபடாத வாக்கு திருட்டு பிரசாரம்.. காங்கிரஸ்க்கு விழுந்த மரண அடி
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை கடுமையாக எதிர்த்து ராகுல் காந்தி செய்த அரசியல் எடுபடாமலேயே பொயுள்ளது தேர்தல் ரிசல்டி தெரியவந்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெற்றதோடு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

காங்கிரஸ் படுதோல்வி
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக 89 இடங்களையும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 இடங்களையும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19 இடங்களையும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 இடங்கள், ராஷ்டிரீய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் கைப்பற்றின.
மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரசின் மகாகத்பந்தன் கூட்டணிக்கு இந்த தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் வெறுமனே 35 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2, ஐ.ஐ.பி. கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
எடுபடாத வாக்கு திருட்டு புகார்
பீகார் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருந்தார். லோக்சபா தேர்தல், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு திருட்டு நடந்ததாக தரவுகளும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்த்தார்.
2010 தேர்தலுக்கு பிறகு
வாக்கு திருட்டு, "சார்"-க்கு எதிராக எதிராக ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தப்பட்டது. இவையெல்லாம் நமக்கு சாதகமாக தேர்தல் ரிசல்டில் கிடைக்கும் என காங்கிரஸ் நினைத்தது. ஆனால் இவை எல்லாம் தேர்தலில் எடுபடாம போனது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சியால் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மோசமான தேர்தலாக அமைந்து இருந்தது. இதனால் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு போன்றவை பீகார் மக்களிடம் எடுபடாமலேயே போயுள்ளது.
ராகுல் காந்தி கருத்து
கார் தேர்தல் ரிசல்ட் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ககிறேன். இந்த முடிவுகள் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது.
தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற ஒரு தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.. அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரசும், மகாகத்பந்தன் கூட்டணியும் ஆழமாக ஆய்வு செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications