பீகார்: நேற்று, இன்று, நாளை.. முழுமையாக பௌதத்திற்கு மாறிய மௌரிய பேரரசு வீழ்த்தப்பட்ட வரலாறு!
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் மௌரிய பேரரசர் அசோகர் குறித்தும், அசோகரின் கலிங்கத்து போர் குறித்தும் பார்த்தோம். இதில் மௌரிய பேரரசு வீழ்ந்தது எப்படி? இதற்கு பௌத்தம் எப்படி காரணமாக அமைந்தது என்பது குறித்து பார்ப்போம்.
மௌரிய பேரரசை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது என்னவோ பிராமண மதத்தை சேர்ந்த சாணக்கியர்தான். ஆனால், மௌரிய பேரரசு தன்னை பௌத்த/சமண ஆதரவு அரசாகவே வளர்த்துக்கொண்டது. மௌரிய பேரரசர்களான சந்திரகுப்த மௌரியர், சணம துறவியாக உயிரிழந்தார். இவருக்கு பின் வந்த மற்றொரு வலுவான அரசரான அசோகர் பௌத்தத்தை தழுவினார். தனது வாரிசுகளை இலங்கைக்கு அனுப்பி பௌத்தத்தை பரவ செய்தார். இது பிராமண மதத்தை சேர்ந்தவர்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியது.

வரலாற்று திருப்பம்
இந்த சமயத்தில்தான் ஒரு முக்கியமான வரலாற்று திருப்பம் ஏற்பட்டது. அதாவது கலிங்கத்துப் போரில் ஏறத்தாழ ஒரு லட்சம் வீரர்களை இழந்த அசோகர் இனி போரே வேண்டாம் என்று பௌத்த மதத்தை தழுவினார். போர்கள் மூலம் நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு பதில், அறத்தின் மூலம் அதை செய்ய நினைத்தார். அவரைத் தொடர்ந்து, அவருக்கு பின் வந்த மற்ற அரசர்களும் பௌத்தத்தை உயர்த்திப் பிடித்தனர். பௌத்தம் அகிம்சையை போதித்தது. எனவே மௌரிய பேரரசின் ராணுவப்படை பலவீனம் அடைய தொடங்கியது. இந்த வரலாற்று புள்ளி தான் மௌரிய பேரரசு வீழ்ச்சிக்கான முக்கியமாக திருப்பமாக அமைந்தது.
பலவீனமடைந்த மௌரிய பேரரசு
அசோகருக்குப் பின் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் வலிமை குன்றியவர்களாக இருந்தனர். அவர்களால் பரந்த பேரரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உள்நாட்டுப் பிரச்சனைகள், கலகங்கள் மற்றும் பிராந்திய அரசுகளின் சுதந்திரம் ஆகியவை அதிகரித்தன. இப்படியாக இந்த பேரரசின் கடைசி மன்னான பிருகத்ரதன், ஒரு பிராமணரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை காலத்தின் பழிவாங்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
படுகொலையும் வீழ்ச்சியும்
தங்களால் உருவான ஒரு பேரரசு, தங்களுக்கு ஆதாவாக இல்லாத ஆதங்கத்தை காலம் காலமாக கொண்டிருந்த ஒரு பிரிவினர், அந்த பேரரசின் கடைசி அரசனை கொன்று பழி தீர்த்துக்கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. பிருககத்ரதனை கொன்றவர் புஷ்யமித்திர சுங்கர் ஆவார். இவர் சுங்க வம்சத்தை நிறுவினார். இந்த சம்பவம் கி.மு. 185ல் நடந்தது.
சுங்க வம்சம்
வேறு சில ஆய்வாளர்கள், மௌரிய பேரரசு வீழ்ச்சியை வேறு கோணத்தில் முன்வைக்கின்றனர். அதாவது புஷ்யமித்திர சுங்கர் வலிமை வாய்ந்தவராகவும், மௌரிய பேரரசை வீழ்த்தி ஆட்சிக்கு வர துடித்துக்கொண்டிருந்ததாகவும், இதற்கேற்றார் போல பௌத்த தாக்கங்களை கொண்டிருந்த மௌரிய பேரரசின் ராணுவம் கிரேக்கர்களின் தாக்கத்தால் பலவீனப்படுத்தப்பட்டிருந்தது என்றும், இந்த தருணத்தை பயன்படுத்தி பிருகத்ரதனை கொன்று புஷ்யமித்திர சுங்கர் ஆட்சிக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மௌரிய பேரரசு வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் பொருளாதார நெருக்கடியாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட இந்த பேரரசு பௌத்த மடாலயங்கள் மற்றும் தூண்களுக்குப் பெரும் செலவு செய்திருக்கிறது. எனவே மக்கள் நல திட்டங்களுக்கும், குறிப்பாக ராணுவத்திற்கும் செலவுகள் போதவில்லை. கருவூலம் காலியாகியிருக்கிறது. எனவே இந்த பேரரசு உள் இருந்து பலவீனமடைந்திருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications