பீகார்: நேற்று, இன்று, நாளை.. அஜந்தா முதல் ஆரியபட்டர் வரை! இந்தியாவை செதுக்கிய குப்த பேரரசு
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பாட்டாலிபுரத்தை(பாட்னாவை) தலைநகராக கொண்ட பீகார் மன்னர்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்ட குப்த பேரரசை பற்றி பார்ப்போம்.
கி.பி. 320 முதல் 550 வரை குப்தர்கள் இந்தியாவை ஆண்டனர். இவர்களின் ஆட்சி பீகாரிலிருந்துதான் தொடங்கியது. பீகாரை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஷாணப் பேரரசு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைய தொடங்கிய நிலையில், ஸ்ரீகுப்தர் எனும் குறுநில மன்னர் தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தினார். இதுதான் குப்த காலத்தின் தொடக்கம்.

மற்ற மன்னர்களை போல ஸ்ரீகுப்தர் யாரையும் வீழ்த்தி ஆட்சிக்கு வரவில்லை. மாறாக, பலவீனமாக இருந்த ஆட்சி அதிகாரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு பேரரசுக்கு அடித்தளமிட்டார்.
குப்த பேரரசு vs மௌரிய பேரரசு
பீகார் வரலாற்றை பொறுத்தவரை நாம் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். இதற்கு முன்னர் 'மௌரிய' பேரரசு பற்றி பார்த்திருந்தோம். அதை தோற்றுவித்தவர் சந்திரகுப்த மௌரியர். இப்போது 'குப்த' பேரரசை பற்றி பார்க்கிறோம். இதை தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர். இரண்டு பெயர்களிலும் 'குப்த' என்கிற பொதுவான வார்த்தை இருப்பதால், இரண்டும் ஒரே வம்சம் என்று கருத கூடாது. 'மௌரிய' பேரரசுக்கும், 'குப்த' பேரரசுக்கும் இடையே 500 ஆண்டு கால இடைவெளி இருக்கிறது.
கலையில் ஏற்பட்ட மாற்றம்
சரி விஷயத்திற்கு வருவோம். குப்த காலம்தான் பண்டைய இந்தியாவின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த காலத்தில்தான் கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டன. கலை துறையில் ஏற்பட்ட மாற்றங்களை முதலில் பார்ப்போம். இந்த காலத்தில் கோயில்களின் கட்டிட கலைகள் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் கண்டன. கோயில் கட்டிட கலையை குப்த காலத்திற்கு 'பின்', அதற்கு 'முன்' என பிரிக்கும் அளவுக்கு இந்த மாற்றம் இருந்தது.
செங்கற்கள் கோயில்கள்
குப்தர் காலத்திற்கு முன்னர் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் குடைவரை மற்றும் மரத்தால் ஆன கோயில்களாக இருந்தன. சில இடங்களில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள் கூட இருந்தன. ஆனால் அவை கலைநயத்தை உயர்த்தி பிடிக்கவில்லை. இந்த இடத்தில்தான் குப்த பேரரசு தனது திறமையை காட்டியது. அதாவது செங்கற்களை கொண்டு கலைநயம் மிக்க கோயில்களை நிறைய கட்டியது. கோயில் கட்டுமான கலையில் 'நாகரா' எனும் வகை இருக்கிறது. இது உருவாக அடித்தளமிட்டதே குப்த பேரரசுதான்.
குப்த கட்டிடக்கலை
இவர்களின் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு 'பிதர்கான் செங்கல்' கோயில். இது உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கி.பி.5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் இன்னமும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதே காலத்தில் உ.பியின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் என்ற கிராமத்தில் தசாவதாரக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் குப்த கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.
அஜந்தா ஓவியங்கள்
குப்த காலத்தில் நடந்த மற்றொரு முக்கியமான வரலாற்று நிகழ்வு அஜந்தா குகை ஓவியங்கள்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள அஜந்தா குகைகளில் கி.மு.2ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.6ம் நூற்றாண்டு வரை ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில், தனித்துவமானது குப்த காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள்தான். கி.பி 4-6ம் நூற்றாண்டு காலத்தில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சொன்னால் நம்ப மாட்டீர்கள், குப்த காலத்தில் 3D எனப்படும் முப்பரிமாண ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்கின்றன.
3D ஓவியங்கள்
சாதாரணமாக இது 2D பரிமாணத்தில்தான் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் வெளிச்சமும், நிழலும் படும்போது இது 3D பரிணாமத்தை கொடுக்கிறது. எனவேதான் இந்த ஓவியங்கள் தனித்துவமானவையாக இருக்கின்றன. இந்த ஓவியங்கள் சுவரில் உள்ள பூச்சு காய்வதற்கு முன், அதன் மீது நேரடியாக வரையப்பட்டவை. இது ஒரு சிக்கலான மற்றும் கடினமான நுட்பமாகும். இந்த பாணியை ஆங்கிலத்தில் 'Fresco' என்று சொல்லுவார்கள். இந்த பாணியில் உச்சத்தை தொட்டது குப்தர்கள்தான்.
அதேபோல ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் செடி, கொடி மற்றும் தாதுக்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. சிவப்பு நிறத்திற்கு செங்கற்களும், நீல நிறத்திற்கு லேபிஸ் லாசுலி போன்ற விலை உயர்ந்த கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓவியங்களில் உள்ள கதாபாத்திரங்களின் முக பாவனைகள் மிகவும் இயல்பானதாக இருப்பதால் எளிதில் கவர்கிறது.
இப்படி குப்த கால சாதனைகளையும், பெருமைகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம். அடுத்த பகுதியில் ஆரியபட்டர் பற்றியும், மற்ற துறைகளில் வளர்ச்சி எப்படி இருந்தது எனவும் பார்ப்போம்.












Click it and Unblock the Notifications