"இது ரூ. 14 கோடியாம்.." திறக்கும் முன்பே சுக்குநூறாக உடைந்த மேம்பாலம்! மிரண்டு நின்ற ஊர் மக்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் திறக்கும் முன்னரே 14 கோடி மதிப்பிலான ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அரசு திட்டங்களில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்து கொண்டே தான் இருக்கும். இந்தியாவில் பல ஆண்டுகளாகவே இதுபோன்ற புகார்கள் இருந்து கொண்டே தான் வருகிறது.
எந்தவொரு திட்டங்களிலும் அரசு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற புகார் பொதுவாகவே இருக்கும்.

பீகார் பாலம்
இதற்கிடையே பீகாரில் திறக்கும் முன்பே பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் புதிதாகப் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலத்தை இன்னும் திறக்கக் கூட இல்லை. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று ஞாயிற்றுக்கிழமை இடிந்து ஆற்றில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாலம் 14 கோடி செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்து
இந்தப் பாலம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவில்லை என்றாலும் கூட இதைப் பொதுமக்கள் பயன்படுத்தியே வந்துள்ளனர். இருப்பினும், நல்வாய்ப்பாகப் பாலம் இடிந்து விழுந்த போது, அதில் யாரும் இல்லை.. புர்ஹி கந்தக் ஆற்றின் மீது பெகுசராய் சாஹேப்பூர் கமல் என்ற பகுதியில் கட்டப்பட்ட பாலத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாலம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பாலம் கந்தக் ஆற்றின் மீது சாஹேப்பூர் கமால் என்ற பகுதியில் அஹோக்-பிஷன்பூர் இடையே கட்டப்பட்டது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டது.

திறக்கும் முன்பே விபத்து
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தப் பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில தாமத்திற்கு பிறகே இந்த கட்டுமானம் முழுமையாக முடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுமானம் முடிக்கப்பட்ட நிலையில், இரு மாதங்களாகவே அங்கு வாகன போக்குவரத்து இருந்துள்ளது. அந்த பாலத்தைப் பீகார் அரசு அதிகாரப்பூர்வமாகத் திறக்கும் முன்பே இந்த விபத்து நடந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வல்லுநர் குழு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications