மருந்து ஆய்வாளர் வீட்டில் 200 சதுர அடியில் ரகசிய அறை.. ஷாக்கான லஞ்ச ஒழிப்புத் துறையினர்!
பாட்னா: பீகாரில் மருந்து ஆய்வாளர் ஒருவரது வீட்டில் 200 சதுர அடி அறையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணமும், தங்க நகைகளும் வெள்ளி பொருட்களும் சிக்கியுள்ளன.
பீகார் தலைநகர் பாட்னாவில் வசித்து வருபவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது சந்தேகத்தின் காரணமாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வீட்டில் 200 சதுர அடி கொண்ட அறை ஒன்றில் ரூ 100 முதல் ரூ 2000 வரை கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அறையில்
அந்த அறையில் ஒரு கட்டில் போடப்பட்டிருக்கிறது. அதன் கீழ்தான் இந்த பணம் நிரப்பப்பட்டிருக்கிறது. அவற்றை எண்ணுவதற்காக அதிகாரிகள் ஷிப்ட் போட்டு எண்ணினர். அப்படியும் எண்ண முடியாது என்பதால் பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வந்து எண்ணி முடித்தனர்.

3 கோடி
வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ 3 கோடி இருக்கும் என கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் ரூ 36.48 லட்சம் தங்க நகை, ரூ 1.66 லட்சம் மதிப்பில் வெள்ளி நகை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் பினாமி சொத்துகளை சேர்த்ததும் தெரியவந்துள்ளது.

4 சொகுசு கார்கள்
அது போல் 4 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜிதேந்திர குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து டினாமினேஷன்களிலும் ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஜிதேந்திர குமார் மருந்து ஆய்வாளராக கடந்த 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

என்னென்ன கைப்பற்றப்பட்டன
அவருக்கு சொந்தமாக தனாபூரில் பார்மஸி கல்லூரியும் இருக்கிறது. ஜிதேந்திர குமாருக்குச் சொந்தமான ஜெஹானாபாத்தில் உள்ள வீடு, கயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், தனாபூர் பார்மஸி கல்லூரியிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. ஜிதேந்திர குமாருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி முடிக்கப்பட்டால் மட்டுமே என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications