BIHAR SIR: ஆளும் கட்சியிலிருந்து புகைச்சல்! தேர்தல் ஆணையத்திற்கு ஒன்னும் தெரியாது - ஜேடியு எம்பி
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்கள் சிறப்பு திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது பாஜக கூட்டணியிலிருக்கும் ஜேடியு எம்பியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்நிலையில் பீகாரில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு வாக்காளர்கள் திருத்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதா தள எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பாஜக இந்த வாக்காளர் திருத்த நடைமுறையை ஆதரித்து வருகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள கட்சியின் எம்பி கிரிதாரி யாதவ் இதை எதிர்த்து பேசியிருப்பது, அரசியல் கவனம் பெற்றிருக்கிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கிரிதாரி, "தேர்தல் ஆணையத்திற்கு கள நிலவரம் பற்றி எதுவும் தெரியாது. பீகாரின் வரலாறு மற்றும் புவியியல் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது" என்று விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "மழைக்காலம் மற்றும் விவசாய வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வாக்காளர்கள் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு தேவையான ஆவணங்களை எப்படி தயார் செய்ய முடியும்? ஆவணங்களை ஏற்பாடு செய்யவே எனக்கு 10 நாட்கள் ஆகிவிட்டது. என் மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். அவன் ஒரு மாதத்தில் எப்படி கையெழுத்திட முடியும்?
அமெரிக்காவில் இருக்கும் என் மகன் எப்படி கையெழுத்திடுவான் என்று சொல்லுங்கள். இது எனது சொந்த அனுபவம். இதுதான் உண்மை. உண்மையை பேச முடியாவிட்டால் நான் ஏன் எம்.பி.யாக இருக்க வேண்டும்?
இந்த சிறப்பு திருத்தம் எங்கள் மீது திணிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதை செய்ய நினைத்தால், ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இது தனது தனிப்பட்ட கருத்து. தனது கட்சியின் கருத்துக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இதே கருத்தை சட்டமன்றத்தில் எதிரொலித்தார். எதிர்க்கட்சி தலைவரும், ஆளும் கட்சியின் எம்பியும் ஒரே கருத்தை வெளிப்படுத்தியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications