இதுதான் குடும்ப அரசியலா? தேர்தலில் 2 மகள்களை களமிறக்கிய லாலு பிரசாத்! கிட்னி தந்த வாரிசும் போட்டி
பாட்னா: பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இடதுசாரிகளின் மகாபந்தன் கூட்டணி, பாஜக+நிதிஷ்குமார் கூட்டணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது. இந்நிலையில், ஆர்ஜேடி நேற்று 22 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. அதில், லாலு பிரசாத்தின் இரண்டு மகள்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும்போதும், மிகவும் கவனம் பெறும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களை சேர்த்தால் மொத்தம் 120 தொகுதிகளை அள்ளிவிடலாம். எனவே வெற்றியை வசப்படுத்த நினைக்கும் கட்சிகள் இரண்டு மாநிலங்களில் பெரும் கவனம் செலுத்துவார்கள். இந்த முறையும், பாஜக vs இந்தியா கூட்டணி பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கியுள்ளன.

உ.பியில் பாஜகதான் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என்பது தெரிந்த கதை. ஆனால் பீகாரின் சூழல் வேறு. பீகார் மாநிலத்தை பொறுத்த அளவில் இங்கு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்தான் கோலோச்சி வருகிறது. ஆனால், நிதிஷ்குமாரின் அரசியல் நிலைப்பாடு மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜகவிலிருந்து விலகி, காங்கிரசுடன் கைகோர்த்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது, பின்னர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து காங்கிரஸை எதிர்த்தது என, இழுக்கும் பக்கமெல்லாம் சென்று, நிலையற்றவராக நிதிஷ்குமார் மாறியிருக்கிறார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிவிடலாம் என மகாபந்தன் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் சமீபத்தில்தான் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில், கூட்டணியின் பிரதான கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தனது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. 22 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத்தின் இரண்டு மகள்களின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இதில் இளையமகள் ரோகினி ஆச்சாரியா சரண் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதற்கு பின்னர் சென்டிமென்ட் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, லாலு பிரசாத், தீவன வழக்கில் பதவியை இழப்பதற்கு முன்னர் வரை இந்த தொகுதியின் எம்பியாக இருந்திருந்தார். அதேபோல மகள் ஆச்சாரியா சமீபத்தில் தன்னுடைய சிறுநீரகத்தை லாலு பிரசாத்துக்கு கொடுத்திருந்தார்.
எனவே, சரண் தொகுதியில் நிற்பது ஆச்சாரியா அல்ல.. லாலு பிரசாத் தான் என ஆர்ஜேடி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இது வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என கட்சி உறுதியாக நம்புகிறது.
மறுபுறம், மூத்த மகளான மிசா பார்திக்கு பாட்டாலிபுரா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்திருப்பதால் அரசியலில் அனுபவம் கொண்டவர். இந்த அனுபவத்தை கொண்டு, லோக்சபாவில் நுழைய முயன்று வருகிறார். ஏற்கெனவே லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதல்வராக இருந்திருக்கிறார். இப்போது இரண்டு மகள்களும் களமிறக்கப்பட்டிருப்பதால், ஆர்ஜேடி கட்சி குடும்ப அரசியலில் தீவிரமாக நுழைகிறது என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.
தொகுதி பங்கீட்டை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 23-ல் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சிபிஐஎம்எல் -3, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் விகாஷீல் இன்சான் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications