மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
பாட்னா: பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.
பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், அம்மாநில முதல்வராக இருந்தபோது கால்நடை தீவன கொள்முதலில் ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், அவரை இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சிறைத்துறை மருத்துவர்களிடம் இருந்து ரிப்போர்ட் வந்ததும், இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லாலுவை டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றத்திலும் காவல் துறையினர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ராஞ்சியில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத்தை நேற்று அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், "அவருக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவ சோதனை முடிவுகளுக்குப் பின் இது குறித்து மருத்துவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
அவருக்கு ஏற்கனவே ஒரு சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், அவரது சிறுநீரகத்தில் தற்போது 25 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. அவருக்கு நிமோனியாவும் கண்டறியப்பட்டுள்ளது. அவர் சுவாசிக்கும்போது சிரமத்தை எதிர்கொள்கிறார். எனவே, அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது குறித்து ஜார்க்ண்ட் மாநில முதல்வரைச் சந்திக்கவுள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications