‛இந்தியா' கூட்டணிக்கு வாய்ப்பில்லை.. பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி தான் வெல்லும் - கருத்து கணிப்பு
பாட்னா: பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பில் மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். ‛இந்தியா' கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு குறித்த முழு விவரம் வருமாறு:
பீகாரில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக அதிக எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும் கூட கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளன.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் டெமாக்கிரஸி டைம்ஸ் நெட்வொர்க் (Democracy Times Network) சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 135 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் 102 தொகுதிகளில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டில் நிதிஷ் குமாரின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி கட்டாயம் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்த ‛இந்தியா' கூட்டணிக்கு இந்த கருத்து கணிப்பு முடிவு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
இந்த கட்சிகள் தவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 3 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications