"இதுதான் தரம்!" பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.. அதுவும் 2ஆவது முறையாக
பாட்னா: பீகார் மாநிலத்தில் கங்கையின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடித்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்க புதிய உள்கட்டமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகப் பல இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கனெக்டிவிட்டி அதிகரித்து கிராமங்களும் வேகமாக வளரும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.
பீகார்: இது நல்ல செயல் தான் என்றாலும் கூட இந்தியாவில் இதுபோன்ற கட்டுமானங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஒப்பந்தங்களுக்குக் குறிப்பிட்ட தொகையை அரசியல்வாதிகளுக்குத் தந்தால் மட்டுமே காண்டிராக்ட் தங்களுக்கு ஒதுக்கப்படுவதாகக் கடந்த காலங்களில் பல புகார்கள் வந்துள்ளன. இப்படிக் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கொடுக்க வேண்டி இருப்பதால் தரமற்ற பொருட்களையே கட்டுமானங்களுக்குப் பயன்படுத்த வேண்டி உள்ளது.
இதனால் அவை போதிய தரத்துடன் இருப்பதில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டு. இதற்கிடையே பீகார் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் ஒன்று அப்படியே இடிந்து விழுந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பீகாரின் பாகல்பூர் என்ற இடத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வீடியோ: அங்கே புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்குள்ள சிலர் தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர். பாலத்தின் இரண்டு பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து இடிந்து விழுவது அதில் பதிவாகியுள்ளது.

இந்த அகுவானி சுல்தங்கஞ்ச் கங்கை பாலம் பீகார் மாநிலம் ககாரியா என்ற இடத்தில் ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை நதியில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது.
குற்றச்சாட்டு: இது குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "கட்டுமான பணிகளுக்கு கமிஷன் வாங்கும் போக்கு அதிகமாகவே இருக்கிறது. இங்கே மாநில அரசின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதற்கான எடுத்துக்காட்டு தான் இது.. பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
#WATCH | Under construction Aguwani-Sultanganj bridge in Bihar’s Bhagalpur collapses. The moment when bridge collapsed was caught on video by locals. This is the second time the bridge has collapsed. Further details awaited.
— ANI (@ANI) June 4, 2023
(Source: Video shot by locals) pic.twitter.com/a44D2RVQQO
மாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதை அங்கிருந்த பலரும் வீடியோவாக எடுத்துள்ளனர். இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக 2022 டிசம்பரில், பீகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வந்த பாலத்தின் ஒரு பகுதி இதேபோல இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், பாலத்தின் 2 மற்றும் 3 தூண்கள் விழுந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பீகாரில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், மக்கள் பீகார் அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications