35 வருஷமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை.. ஆனால் 5 முறை முதல்வராக சாதித்த ஜெகஜால நிதிஷ்குமார்!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமலேயே அம்மாநிலத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்துவிட்டார் நிதிஷ்குமார்.
பீகார் மாநிலத்தின் முதல்வராக 2000, 2005, 2010 மற்றும் 2015, 2017 என 5 முறை நிதிஷ்குமார் பதவி வகித்திருக்கிறார். 1977-ம் ஆண்டுதான் முதன் முதலாக நிதிஷ்குமார் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஹர்னாட்(Harnaut) தொகுதியில் போட்டியிட்ட நிதிஷ்குமார் தோல்வியைத் தழுவினார்.
பின்னர் 1985 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நிதிஷ்குமார். அன்றில் இருந்து இன்று வரை சட்டசபை தேர்தல்கள் எதிலுமே நிதிஷ்குமார் போட்டியிட்டதே இல்லை. அதேநேரத்தில் 1989-ம் ஆண்டு முதல் லோக்சபா தேர்தலில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிதிஷ்குமார்.

2000-ல் 7 நாட்கள் முதல்வர்
2000-ம் ஆண்டு மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்த போது பீகாரின் முதல்வராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார் நிதிஷ்குமார். அப்போது 7நாட்கள் மட்டுமே அவர் பதவியில் இருந்தார். அந்த சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஜேடியூ இடம்பெற்றிருந்தது. பாஜகவும் ஜேடியூ கட்சியும் மொத்தம் 151 இடங்களில் வென்றிருந்தன. லாலுவின் ஆர்ஜேடி கட்சி 159 தொகுதிகளைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்குத் தேவையான 163 எம்.எல்.ஏக்கள் இல்லாததால் நிதிஷ்குமார் 7 நாட்களில் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

2-வது முறையாக நிதிஷ் முதல்வர்
பின்னர் கடைசியாக 2004 லோக்சபா தேர்தலில் நாளந்தா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நிதிஷ்குமார். 2005-ல் பீகார் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது ஜேடியூ. அந்த தேர்தலில் ஜேடியூ-பாஜக அணி வென்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2-வது முறையாக பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்.

2013 வரை பாஜக- ஜேடியூ கூட்டணி
2010-ம் ஆண்டு வரை தொடர்ந்து பீகாரின் முதல்வராக பதவியில் இருந்த நிதிஷ் அப்போது பீகார் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 சட்டசபை தேர்தலிலும் ஜேடியூ-பாஜக அணி அமோக வெற்றி பெற மீண்டும் 3-வது முறை முதல்வரான நிதிஷ்குமார் அப்போதும் சட்டமேலவை உறுப்பினராகவே இருந்தார். 2013-ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதை அப்போது கடுமையாக எதிர்த்தவர்களில் நிதிஷ்குமாரும் ஒருவர். இதனால் பாஜகவுடனான நீண்டகால கூட்டணியையே முறித்துக் கொண்டது ஜேடியூ.

ஆர்ஜேடி-காங்- ஜேடியூ கூட்டணி
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஜேடியூ படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். பின்னர் 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தது ஜேடியூ. அந்த சட்டசபை தேர்தலில் பிரமாண்ட வெற்றியும் கிடைத்தது. ஆனால் 2 ஆண்டுகளில் இந்த கூட்டணிக்கு முடிவுக்கு வர 2017-ல் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில மணிநேரங்களில் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார்.

எல்லா காலத்திலும் எம்.எல்.சிதான்
2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிதிஷ் முதல்வராக இருக்கிறார். இப்போதும் பீகார் சட்டமேலவை உறுப்பினர்தான் நிதிஷ்குமார். மொத்தம் 3 முறை சட்டமேலவை உறுப்பினராகவே இருந்து முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொண்டவர் நிதிஷ்குமார். இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் நிதிஷ்குமார் போட்டியிடப் போவதில்லையாம். பீகாரில் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலம் 6 ஆண்டுகள். தற்போது 74 வயதாகும் நிதிஷ்குமார், இந்த எம்.எல்.சி பதவிகாலம் முடிவடையும் அதாவது 2024-க்குப் பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications