‛‛பிரதமர் மோடி இந்துவே கிடையாது’’.. தாய் இறந்தபோது மொட்டையடிக்காதது ஏன்? சர்ச்சையை கிளப்பிய லாலு
பாட்னா: பிரதமர் மோடி இந்துவே கிடையாது என அவரது தாயாரின் மறைவின்போது நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் 2020ல் சட்டசபை தேர்தலுக்கு பிறகு பாஜகவில் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ) கட்சியின் நிதிஷ் குமார் லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

தற்போது அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்து அவர் மீண்டும் பாஜகவின் பழைய கூட்டணிக்கே சென்றுள்ளார்.
இந்நிலையில் தான் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ‛ஜன் விஸ்வாஸ் மகா ரேலி' என்ற பெயரில் ஆர்ஜேடி கட்சி சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இத்தகைய சூழலில் தான் அவர் கூறிய ஒரு கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது. அதாவது பிரதமர் மோடியின் தாயின் இறப்பை சுட்டிக்காட்டி லாலு பிரசாத் பேசியிருப்பது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது மேடையில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ‛‛பிரதமர் மோடி நாட்டில் வெறுப்பை தூண்டுகிறார். பிரதமர் மோடி இந்து கிடையாது. பொதுவாக தாயார் மறைந்தால் இந்துக்கள் மொட்டையடித்து கொள்வார்கள். அதோடு தாடியை ேஷவ் செய்வார்கள். ஆனால் பிரதமர் மோடி அப்படி எதுவும் செய்யவில்லை. அவர் ஏன் மொட்டையடித்து கொள்ளவில்லை என்பதை கூற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவின் இந்த பேச்சு தான் தற்போது பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பி சர்ச்சையாகி உள்ளது. முன்னதாக லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். 2017 ல் செய்த தவறை மீண்டும் செய்துவிட்டார். அப்போது நானும், இப்போது என் மகனும் அவரை நம்பி ஏமாந்துவிட்டோம் எனவும் உருக்கமாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications