பிரசாந்த் கிஷோருக்கு தமிழக மது ஆலையில் இருந்து பணம் போகுதாம்.. பரபரப்பை கிளப்பிய பாஜக எம்பி
பாட்னா: ‛‛தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலைகளில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது. அவர் லாலு பிரசாத் யாதவின் கட்சிக்காக உழைத்து வருகிறார்'' என பீகார் மாநில முன்னாள் பாஜக தலைவரும், எம்பியுமான சஞ்சய் ஜெய்ஸ்வால் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், பாஜக உள்பட இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளன. மறுபுறம் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் பீகாரில் அரசியல் களம் களைகட்டி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கையை கண்டித்து ராகுல் காந்தி பீகாரில் பேரணி சென்றார். இது அரசியல் களத்தை உஷ்ணமாக்கியது.
அதேபோல் தேர்தல் வியூக வகுப்பாளராக உள்ள பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சியை தொடங்கி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
இந்நிலையில் தான் பீகார் மாநில முன்னாள் பாஜக தலைவரும், தற்போதைய பாஜக எம்பியுமான சஞ்சய் ஜெய்ஸ்வால், பிரசாந்த் கிஷோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாஜவின் ஓட்டுக்களை குறைக்க, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர் ஆர்ஜேடி கட்சிக்காக பணி செய்து வருகிறார்.
பிரசாந்த் கிஷோருக்கு தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலைகளில் இருந்து பணம் வருகிறது. முதல்நாளில் இருந்தே பிரசாந்த் கிஷோர் மக்களை ஏமாற்றி வருகிறார். தனது கட்சி உருவான பின்னணி குறித்து அவர் பொய் சொல்கிறார். 2022 ஆகஸ்ட் மாதம் டெல்லியில் அவர் கட்சியை பதிவு செய்தார். அதன்பிறகு 2024 அக்டோபர் மாதம் தான் கட்சி தொடங்கியதாக கூறியுள்ளார்.
பொய்கள், ஏமாற்றுதல் மற்றும் மோசடி மூலம் தனது கட்சியைத் தொடங்கிய அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்று சிந்திக்க வேண்டும். ஜன் சுராஜ் கட்சியின் சட்டவிரோத நிதி மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தினால் சிக்கி கொள்வார்கள். அவர் தப்பிப்பதற்கு, பிகே உதய் சிங் என்ற பப்பு சிங் மற்றும் மனோஜ் பாரதியை கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைவராக நியமித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தற்போது பீகாரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பாஜக தலைவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே, கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த அமைச்சர் அசோக் சவுத்ரி உள்ளிட்டவர்களின் மீது ஊழல், முறைகேடு புகார்களை கூறி வருகிறார். இப்படியான சூழலில் பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால், பிரசாந்த் கிஷோரை டார்க்கெட் செய்து விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி பிரசாந்த் கிஷோர் கூறும்போது, ‛‛சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது. அவர் என்னை போன்றவர்களை எதிர்த்து சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். 4 நாட்களுக்கு பிறகு அவர் அமைதியாகிவிடுவார். என்னை ஏழு ஜென்மத்திலும் சிறைக்கு அனுப்ப முடியாது. சஞ்சய் ஜெய்ஸ்வால் நடத்தும் பெட்ரோல் பங்கில் மாநகராட்சி வாகனங்கள் பேரில் போலி பில் தயாரிக்கப்படுவது மக்களுக்கு தெரியும். அனைத்து பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களும் இந்த மோசடி குறித்து புகார் அளித்திருந்தனர்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications