தவறு நடந்தால் பொதுமக்கள் பார்த்துக்கொள்வார்கள்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த வார்னிங்! பீகாரில் மாறும் களம்
பாட்னா: கடந்த முறை நடந்ததை போல இந்த முறையும் நிர்வாக தவறு ஏதேனும் நடந்தால், அல்லது அரசியலமைப்பு சட்டத்தை யாரேனும் மீறினால் அவர்களை மக்கள் ஒரு கை பார்ப்பார்கள் என்று பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.
பீகாரில் கடந்த நவ.6 மற்றும் நவ.11ம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் தேஜஸ்வி கலந்தாலோசனை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, "பீகார் மக்கள் சாதி, மதம் பாராமல் பெருமளவில் வாக்களித்திருக்கின்றனர். நாங்கள் நிச்சயம் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. 2020ஆம் ஆண்டை விட இந்தத் தேர்தலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர், இது ஒரு சாதனை. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், சாதி, மதம் பாராமல், மகாபந்தன் கூட்டணிக்கு பெரும் ஆதரவுடன் வாக்களித்துள்ளனர். மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
நாங்கள் ஆட்சியமைப்பது உறுதி. நாளை தேர்தலில் நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம். எங்கள் கட்சித் தொண்டர்கள் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் விழிப்புடன் உள்ளனர். 2020ஆம் ஆண்டு தவறை நிர்வாகம் மீண்டும் செய்தால் அல்லது யாராவது வரம்பை மீறினால், அரசியலமைப்பிற்கு முரணான, நியாயமற்ற செயல்களைச் செய்தால், அல்லது எந்த ஒரு அதிகாரியும் யாருடைய உத்தரவின் பேரிலாவது செயல்பட்டால், பொதுமக்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.
வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்கவும், மகாபந்தன் வெற்றி பெற்ற தொகுதிகளை அறிவிக்காமல், என்டிஏ தொகுதிகளை முதலில் அறிவிக்கவும் சதி நடக்கும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. நாளை அவர்கள் இந்த மாதிரியான தந்திரங்களைச் செய்வார்கள்" என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து கூட்டணி கட்சி தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை செயல்முறை முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய மகாபந்தன் தலைவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் நியாயமான மற்றும் வெளிப்படையான வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், "வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வந்தார்கள். வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெற வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பு வெளியாக அனுமதிக்க வேண்டும். எங்கள் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன. எங்கள் தொண்டர்கள் தயாராக உள்ளனர். மக்கள் வாக்கு எண்ணும் மையங்களில் நாள் முழுவதும் விழிப்புடன் இருப்பார்கள். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 46 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் 67.13% பேர் வாக்களித்து சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 7.45 கோடி வாக்காளர்கள் 2,616 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விதமாக வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications