தாய் பாலில் யுரேனியம்.. இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பாட்னா: அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியம், தாய்ப்பாலில் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தாய் பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் யுரேனியம் எந்த அளவுக்கு ஆபத்து என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலில் அதிக அளவு யுரேனியம் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. நேச்சர் இதழில் வெளியான இந்த ஆய்வு பீகாரில் உள்ள 40 தாய்மார்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

6 மாவட்டங்களில் சோதனை
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடைபெற்று வந்திருக்கிறது. 40 தாய்ப்பால் மாதிரிகளிலும் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு ஆபத்தானதை விட குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பீகார் மாநிலத்தின் போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 40 தாய்மார்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கதிஹார் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட தாய் பாலில் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 5.25 மைக்ரோகிராம் அளவுக்கு யுரேனியம் இருந்திருக்கிறது. கதிஹாரைத் தொடர்ந்து சமஸ்திபூர், நாளந்தா, ககாரியா, பெகுசராய், போஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் யுரேனியம் அளவு குறைவான வரிசையில் கண்டறியப்பட்டது என நேச்சர் இதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாதிப்பு இல்லையா?
குறைந்த அளவே யுரேனியம் இருப்பதால் பாதிப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், மனிதப் பாலில் எந்த அளவு யுரேனியம் பாதுகாப்பானது என்று எந்த நிறுவனமும் குறிப்பிடவில்லை. உலக சுகாதார மையம் நிலத்தடி நீரில் எந்த அளவுக்கு யுரேனியம் இருந்தால் பாதுகாப்பானது? என்பதை விளக்கியுள்ளது. ஒரு லிட்டர் நீரில் 30 மைக்ரோகிராம் யுரேனியம் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது. பீகார் மாநிலத்தில் தாய்ப்பாலில் யுரேனியம் இருக்க காரணம், அம்மாநில நிலத்தடி நீரில் கணிசமான அளவு யுரெனியம் இருப்பதுதான்.
நிலத்தடி நீர் மாசுபாடு
சுபால் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 82 மைக்ரோகிராம் யுரேனியம் (µg/L) கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நாலந்தாவில் 77 µg/L மற்றும் வைஷாலியில் 66 µg/L என்கிற அளவில் யுரேனியம் இருக்கிறது. தாய்ப்பால் மாதிரிகளில் கண்டறியப்பட்ட யுரேனியம் அளவு உடனடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
யுரேனியம் ஏன் ஆபத்தானது?
60 கிலோ எடை இருக்கும் நபர், ஒரு நாளைக்கு 30 மைக்ரோ கிராம் வரை யுரேனியத்தை எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. இந்த அளவை தாண்டும்போது, சிறுநீரகங்கள் உடனடியாக பாதிக்கப்படும். நாம் குடிக்கும் நீர், குறிப்பாக கிணற்று நீரில் யுரேனியம் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. அதேபோல நிலத்தடியில் விளையும் உருளை, கேரட் போன்ற காய்கறிகளிலும் யுரேனியம் மிகச் சிறிய அளவில் இருக்கலாம். நன்கு கழுவி, தோலை சீவிவிட்டு சமைக்கும்போது பிரச்சனையில்லை. அதேபோல இறைச்சிகளில் யுரேனியம் இருக்க அதிக வாய்ப்பு இல்லை.
ஒருவேளை தாய் பாலில் அதிக அளவு யுரேனியம் இருப்பின், குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, IQ ஐக் குறைத்து, கற்றல் திறனைப் பாதித்து, நீண்டகால அறிவாற்றல் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். மட்டுமல்லாது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். இருப்பினும், தற்போதைய மாதிரிகளில் குழந்தைகளின் மீதான ஒட்டுமொத்த தாக்கம் குறைவாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications