வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த இளம் பெண்.. சில்மிஷ டிரைவரிடம் தப்பி, இளைஞர்களிடம் சிக்கினார்
புதுச்சேரி : புதுச்சேரியில் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்த பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் தப்பிய இளம்பெண்ணை, ஆசை வார்த்தை கூறி வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி திப்புராயப்பேட் பகுதியை சேர்ந்த அகிலா (வயது 22) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த செப்டம்பர் 29-ந்தேதி இரவு குடும்பத்தாரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வீட்டில் இருந்து ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் தன்னை பஸ் ஸ்டாண்டிற்கு கொண்டுபோய் விடும்படி கூறியிருக்கிறார்.

அந்த ஆட்டோ டிரைவர் பெண்ணை பார்த்ததும், முதலியார்பேட்டை அனிதா நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆட்டோவை நிறுத்தி விட்டு, அப்பெண்ணிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். உடனே ஆட்டோவை எடுத்துக்கொண்டு டிரைவர் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார்.
இதனிடையே இரவில் அனிதா நகர் பகுதியில் தனியாக நின்றுக்கொண்டிருந்த அகிலாவை பார்த்த அங்கிருந்த சில இளைஞர்கள் நடந்த விவரத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களில், ஒரு இளைஞர் அந்த இளம்பெண்னிடம் மிகவும் நம்பிக்கைக்குரிய வகையில் பேசி உள்ளார். உனக்காக நானிருப்பேன் என்கிற ரேஞ்சில் அடித்துவிட்டு, சினிமா பாணியில் அந்த பெண்ணை பேசியே மயக்கி உள்ளார். அந்த பெண்ணும் இவரை திருமணம் செய்ய சம்மதித்து அவர் பின்னாலேயே சென்றுள்ளார்.
இந்நிலையில் உன்னை எனக்கு பிடித்துள்ளது என்றும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதனை உண்மையென நம்பிய அந்த பெண், அந்த இளைஞர் மற்றும் அவரின் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இளம்பெண் நேற்று முன்தினம் பகலில் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி வந்துள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார். அந்த கடைக்காரர் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டார்கள். அதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடித்தனர். அதன்படி புதுவை கொம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாதிக்பாட்ஷா (வயது 40), லாஸ்பேட்டை தினேஷ் (28), அரவிந்த் (25) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இளம்பெண்ணை இரண்டு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதால், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications