“அதிமுக இங்கு மட்டும்தான்.. புதுச்சேரியில் NDA கூட்டணியில் இல்லை”.. பாஜக மேலிட பொறுப்பாளர் பளிச்!
புதுச்சேரி: புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தற்சமயம் அதிமுக இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ், தமிழகத்தில் தவெக உடன் கூட்டணி என்பதையும் மறுத்துள்ளார் அவர்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14 ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்த பின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரிக்கு வருகை தந்தார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று மதியம் சந்தித்து பேசினர்.பிரதமர் வருகை தொடர்பாக துணைநிலை ஆளுநரை சந்தித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, "புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1 ஆம் தேதி மதியம் பிரதமர் மோடி வருகிறார். அரசு முறை பயணமாக புதுச்சேரி வரும் அவருக்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கடந்த 14 ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது. தற்சமயம் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி தொகுதிகள் பிறகு முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில்தான் என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ளது. புதுச்சேரியில் தற்சமயம் அதிமுக எங்கள் கூட்டணியில் இல்லை. புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் என்டிஏ உடனும், தமிழகத்தில் தவெக உடனும் கூட்டணி வைப்பதாக வரும் தகவல் வெறும் வதந்திதான். அதுபோல் முதல்வர் ரங்கசாமி எதுவும் சொல்லவில்லை. முதல்வரை அண்மையில் சந்தித்து பிரதமர் புதுச்சேரி வருகை பற்றி பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரங்கசாமி, லட்சிய ஜனநாயக கட்சி அதாவது லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்றும், அப்படி சேர்த்தால் தமிழகத்தில் தவெக உடன் கூட்டணி சேரப்போவதாகவும் அவர் சுரானாவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.












Click it and Unblock the Notifications