வட மாநிலங்களை தொடர்ந்து.. புதுச்சேரியிலும் விடுமுறை! களைகட்டும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழா
புதுச்சேரி: வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன.
திரிபுரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் அனைத்து அரசு நிறுவனங்களும், கல்வி நிலையங்களும் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசத்தில் 22ம் தேதி முழு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மதுபான கடைகள் என அனைத்தும் மூடப்படும்.

கோவாவில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அன்றைய தினம் செயல்படாது. ஒடிசாவில் முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீதிமன்றங்கள் அரை நாள் செயல்படும். மேலும் அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 22ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர 22ம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் மதியம் வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications