பானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்
புதுச்சேரி: புதுச்சேரியில் உலக சாதனை நிகழ்வுக்காக பள்ளி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கடற்கரை சாலையில் பானை மேல் நின்று யோகாசனம் செய்தும், யோகா செய்துகொண்டே ஓவியம் வரைந்தும் சாதனை நிகழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

யோகா என்பது உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. யோகா பயிற்சி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளனர். நம்மில் பலரும் இன்று யோகாவுடன் நாட்களை தொடங்குகின்றனர்.

தற்போது மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். அதேபோல் யோகாவில் வித்தியாசமான ஆசனங்களை செய்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் யோக கலைஞர்கள் அவ்வப்போது உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தனியார் பள்ளி சார்பில் யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், டிவைன் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்காக 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 25 க்கும் மேற்பட்ட யோகாசனங்களை நிகழ்த்திகாட்டி சாதனை நிகழ்த்தினர்.

இதில் குறிப்பாக உலக சாதனை நிகழ்வுக்காக பானை மேல் நின்றபடி பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தது மட்டுமல்லாமல், யோகா செய்து கொண்டே ஓவியம் வரைவது, தாளத்திற்கு ஏற்றாற்போல் யோகாசனம் செய்வது போன்ற ஆசனங்களை மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினர். மாணவ, மாணவிகளின் பல்வேறு யோகாசன உலக சாதனை நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் மற்றும் கடற்கரை சாலைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் கண்டு வியந்தனர். மாணவர்களின் இந்த முயற்சி பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், டிவைன் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
















Click it and Unblock the Notifications