15 நிமிட முயற்சி.. கடுப்பேற்றிய மைக்.. 'கூலாக' கையாண்ட கமல்... புதுவையில் செம ஜோர்
புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்திற்காகப் புதுவை சென்ற கமல், ஆம்பூர் சாலையில் பேச தொடங்கியபோது, மைக் வேலை செய்யவில்லை. இதனால் டார்ச் லைட்டை காட்டி, அங்குக் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தைப் போலவே புதுவையிலும் போட்டியிடுகிறது. அங்குள்ள 30 தொகுதியில் 22 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.

புதுவையில் கமல்
கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தனி விமானம் மூலம் புதுச்சேரி சென்றார். அங்கு மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக நான்கு இடங்களில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார்.

வேலை செய்யாத மைக்
முதலில் ஆம்பூர் சாலையில் கமல் பேச தொடங்கியபோது, மைக் வேலை செய்யவில்லை. தொடர்ந்து 15 நிமிடம் முயன்ற பின்னரும் மைக் வேலை செய்யாததால் கமல் அங்கு பேசவில்லை.. பின்னர் டார்ச் லைட்டை காட்டி, அங்குக் கூடியிருந்த மக்களிடம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி தெரிவித்தார்.

மக்கள் சேவகர்கள்
அதைத்தொடர்ந்து முதலியார்பேட்டை தபால் நிலையம் அருகே பேசிய அவர், புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்றால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், அவர் பேசுகையில், "இங்கு இருக்கும் எங்கள் வேட்பாளர்களை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் உங்களில் ஒருவர் தான். இவர்கள் அனைவரும் உங்கள் சேவகர்கள். உங்களுக்குச் சேவை செய்வதற்காக நீங்கள் மநீம வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

அடிப்படை பிரச்னைகள்
மேலும், புதுச்சேரியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் என்னவென்று தமக்குத் தெரியும் என்றும் குறிப்பாகத் திறந்தவெளி சாக்கடை, போக்குவரத்து பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications