புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டி? முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக ஆலோசனை!
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று ஆலோசனை நடத்தினார். புதுவை முதல்வர் ரங்கசாமியுடனும் இது தொடர்பாக பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் வெளியிடப்பட்டன. இதில் 34 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சர்களும் லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடக் கூடும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதுச்சேரிக்கு இன்று வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுச்சேரி பாஜகவினருடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல புதுவை முதல்வர் ரங்கசாமியுடனும் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது தொடர்பாக பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவார் என கூறப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிர்மலா சீதாராமன். இம்முறையும் பாஜக எளிதில் வெல்லும் வாய்ப்புள்ள கர்நாடகா மாநில லோக்சபா தொகுதி ஒன்றில் நிர்மலா சீதாராமன் போட்டியிட சாத்தியம் அதிகம் எனக் கூறப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் தமிழ்நாட்டு தொகுதிகளில் ஒன்றில் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications