இரவில் இங்கே ஏன் வந்தீங்க?.. புதுச்சேரி பல்கலையில் மாணவியிடம் நெருங்கிய 3 பேர்.. மீண்டும் அக்கிரமம்?
புதுச்சேரி: புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த 3 பேர் கும்பல் காதலனை தாக்கி துரத்திவிட்டு வடமாநில மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த முக்கிய கோரிக்கையும் அரசுக்கு விடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில், காலாப்பட்டில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை, முதுநிலை என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 3000 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அந்தவகையில், வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பல்கலைக்கழக ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து முதலாமாண்டு இளநிலை பொறியியல் படித்து வருகிறார். இந்த மாணவி இதே பல்கலையில் உள்ள மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.. இங்குள்ள வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் செடி, கொடிகள் நிறைந்துள்ள பகுதியில் தனிமையில் பேசி கொண்டிருந்தார்கள்.. அப்போது அவர்களிடம் வந்த 3 பேர் கும்பல், "இங்கு என்ன செய்றீங்க, எதுக்காக வந்தீங்க" என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.
3 பேர் கொண்ட கும்பல்: இதனால் அந்த காதலன் கோபமடைந்து, அவர்களை தட்டிக்கேட்டுள்ளதாக தெரிகிறது. உடனே 3 பேர் கொண்ட கும்பல், காதலனை சரமாரியாக தாக்கியிருக்கிறது.. அத்துடன், மாணவியையும், 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.. அப்போது மாணவி, அவர்களிடமிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.. ஆனால் மாணவியை விரட்டி கொண்டே சென்ற கும்பல், மறுபடியும் அவரை தாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது.
எனினும் 3 பேரிடமிருந்தும் சுதாரித்துக்கொண்ட மாணவி, கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அவரது கதறலை கண்டு நடுங்கிப்போன கும்பல், அந்த மாணவியை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தது.. இதில் உடம்பெல்லாம் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பிறகு மீண்டும், தன்னுடைய ஹாஸ்டலுக்கு திரும்பியிருக்கிறார்.
கெட்டப்பெயர்: பிறகு தனக்கு நடந்த கொடுமை குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தந்தார்.. ஆனால், இந்த விவகாரம் வெளியே வந்தால் பல்கலைக்கழகத்துக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதால், இதனை மூடி மறைத்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது..
இதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களில் 2 பேர் புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்களாம்.. எனினும், இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அண்ணா பல்கலை: ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் இதுபோலவே ஒரு சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடந்து ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சி சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடந்து வரும்நிலையில், அந்தந்த அரசாங்கங்கள் தடுக்க நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications