'கோல்மால் லேடி'.. டெஸ்டுக்கு வந்த இடத்தில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. அப்படியே மிரண்டுபோன போலீஸ்
புதுச்சேரி: பள்ளி தேர்வோ,கல்லூரி தேர்வோ அல்லது அரசு பணிகளுக்கான தேர்வோ என்னதான் கண்காணிப்பு தீவிரமாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எழுத்து தேர்வில் திருட்டுதனத்தில் ஈடுபட்டு பலர் சிக்கி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் புதுவையில் போலீஸ் உடல்தகுதி தேர்வில் காவலர்களை நூதன முறையில் ஏமாற்றிய பெண் கையும், களவுமாக சிக்கியுள்ளார். இதனைபற்றிதான் பார்க்க போகிறோம்.

புதுவை போலீஸ்
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் ரேடியோ டெக்னீசியன் 12 டேக் ஹேண்ட்லர் 29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதித்தேர்வு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய உடல் தகுதித்தேர்வு தினமும் நடந்து வருகிறது. தினமும் 750 பேர் வீதம் அழைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடக்கிறது. இதுவரை நடந்த தேர்வில் 1,844 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உடற்தகுதி தேர்வு
இதில் மொத்த கான்ஸ்டபிள் பணி இடத்தில் 32 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. 200 மீட்டர் ஓட்டம் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 324 பேர் பங்கேற்ற நிலையில் உடற்தகுதியுடன் உள்ள 188 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கோல்மால் லேடி
இந்த உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த பெண்தான் போலீசாரை ஏமாற்ற முயன்றுள்ளார். அதாவது மெலிந்த உடல் அமைப்புடன் இருந்த அந்தப் பெண் உடற்தகுதிக்கு தேவையான 45 கிலோ எடையுடன் இருந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு லேசாக சந்தேகம் எழுந்தது, மேலும் அவர் நடந்து செல்லும முறை சற்று வித்தியாசமாக இருந்ததால் உடல் தகுதித்தேர்வு நடத்தியவர்களுக்கு இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பெண்ணை சோதனையிட்டனர்.

மிரண்டுபோன போலீஸ்
அப்போது போலீசாருக்கு தூக்கிவாரி போட்டது. சோதனை செய்தபோது அந்த பெண் பேன்ட் மேல் பேன்ட் அணிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது முதலில் ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அதன் மீது
மூன்று லேயர் பேண்ட் அணிந்து இருந்ததும் தெரியவந்தது. அந்த பெண் கூடுதலாக அணிந்திருந்த ஆடைகள் 2.2 கிலோ எடை இருந்தது. அந்த பெண்ணின் சாதாரண எடை 43 கிலோ. உடற்தகுதி தேர்வுக்கு தேவையான 45 கிலோவை எட்டுவதற்கு உடல் எடை அதிகரித்து காட்டுவதற்காக நான்கு பேண்டுகள் அணிந்து வந்திருந்தது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications