நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்: புதுச்சேரி திமுக நிர்வாகத்தில் திடீர் மாற்றம்: நிர்வாகிகள் அறிவிப்பு
புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி திமுகவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு புதுச்சேரி திமுக, தெற்கு புதுச்சேரி திமுக என்ற இரண்டாக செயல்பட்டு வந்த கட்சி புதுச்சேரி மாநில திமுக என்று ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படடுகிறது. புதுச்சேரியில் 1968-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதன்பின் 2006ல்தான் இரண்டாவது உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆம் 38 வருடமாக அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

2006 தேர்தல்
2006 தேர்தலுக்கு பின் இடைவெளி இன்றி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2011ல் நடக்க வேண்டிய தேர்தல் நடத்தப்படவில்லை. 2006க்கு பின் இதுவரை அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இத்தனை வருடங்களாக அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை தவறானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையிலும் தேர்தல் மட்டும் நடத்தப்படவில்லை.

வழக்கு
புதுவையை சேர்ந்த பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் புதுச்சேரியில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு வார்டு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. நான்கு மாதங்களில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் அதன்பின் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தேர்தல்
இதனால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி திமுகவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்த திமுக மாவட்ட நிர்வாகிகள் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளனர். வடக்கு புதுச்சேரி திமுக, தெற்கு புதுச்சேரி திமுக என்ற இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்த கட்சி புதுச்சேரி மாநில திமுக என்று ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள்
அதோடு புதிய நிர்வாகிகள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில திமுகவின் அவைத்தலைவராக எஸ்.பி சிவக்குமார், அமைப்பாளராக இரா. சிவா, பொருளாளராக கே.எம்.பி லோகையன், துணை அமைப்பாளராக வி அனிபால் கென்னடி, ஏ. குமார். எஸ். எஸ் செந்திலுமார், சன்.குமாரவேல். என். கலியபெருமாள், ம. குணா, சுந்தரி அல்லிமுத்து, அமுதா குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள், என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications