புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ3,000 கொரோனா நிவாரண உதவி!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 3,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் அத்தியாவசிய கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதனால் புதுச்சேரி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி பதவியேற்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப் படுத்திக் கொண்டார்.
இதனால் இன்றுவரை எந்த ஒரு நிவாரணமும் பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவிக்கவில்லை, இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, எம்.எல்.ஏவாக பதவியேற்று கொண்ட ரங்கசாமி துணைநிலை ஆளுநர் மாளிகை சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் நிவாரணமாக வழங்குவதற்கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications