புதுவை சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு! போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்
புதுவை: புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.

சிறுமியை காணவில்லை: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. நேற்றைய தினம் கூட 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
கால்வாயில் கொடூரம்: இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வட்டாட்சியர் முன்னிலையில் 2 மணி நேரம் நடந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவாக எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மேலும் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டதாகவும் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுமி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்களும் உறவினர்களும் கூறி வருகிறார்கள். சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ 20 லட்சத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோரை தலைமைச் செயலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார் புதுவை முதல்வர் ரங்கசாமி. அப்போது ரூ 20 லட்சத்திற்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். மேலும் சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என முதல்வர் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து சிறுமியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர். இதனிடையே சிறுமியை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய போராட்டக்காரர்கள் திடீரென அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறியதாக தெரிகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications