அடிதூள்.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் புதுச்சேரியில் தொடக்கம்! மக்கள் ஹேப்பி
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று அந்த திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைந்து தொடங்கி வைத்தனர்
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் திமுக சார்பில் பல வாக்குறுதிகள் முன்வைத்தது. அதில் முக்கியமானது மாநிலத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இத்திட்டம் இன்னுமே தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடக்கம்
விரைவில் இந்த மாதம் 1000 திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரியிலும் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்குப் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கு சில காலம் முன்பு தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்தச் சூழலில் இந்த திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைந்து தொடங்கி வைத்தனர்

ஆளுநர் தமிழிசை
அங்கு வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகள், மற்ற உதவித்தொகை எதையும் பெறாமல் இருந்தால்.. அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரியில் கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் தமிழிசை இம்மா தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

தொடங்கி வைத்தார்
இதனிடையே இந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்குக் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

யாருக்குக் கிடைக்கும்
இத்திட்டம் மூலம் புதுச்சேரியில் உள்ள 70 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.. முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு அரசு உதவித்தொகையும் பெறாத வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. அங்கு 21 வயது முதல் 55 வயதுக்குள் இருக்கும் அரசு உதவித் தொகை பெறாத குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications