புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கத்துக்கு கொரோனா... 2 டோஸ் தடுப்பூசி போட்டும் வைரஸ் பரவியது எப்படி..?
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவரை, கொரோனா வைரஸ் எப்படி தாக்கியது என்பது குறித்து ஜிப்மர் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
வைத்திலிங்கம் எம்.பி.யின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ள ஜிப்மர் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

71 வயது
புதுச்சேரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான வைத்திலிங்கத்துக்கு 71 வயதாகிறது. புதுச்சேரி மாநில அரசியலில் முக்கிய முகமாக திகழும் இவர், நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். எப்போதும் தடபுடலாக பிறந்தநாள் கொண்டாடும் வைத்திலிங்கம், இந்த ஆண்டு அதாவது நேற்று முன் தினம் தனது உடலில் இருந்த மிகுந்த அயர்வால் நெருக்காமனவர்களை மட்டும் சந்தித்து வாழ்த்து பெற்று 71-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

லேசான காய்ச்சல்
அன்றைய தினமே அவருக்கு உடல்வலி அதிகரித்ததோடு லேசான காய்ச்சலும் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, அங்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. நேற்றிரவு வெளியான சோதனை முடிவில் வைத்திலிங்கத்துக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

2 டோஸ் தடுப்பூசி
இவர்கள் இருவரும் கேவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் வட்டாரம் ஆராய்ந்து வருகிறது. பிறந்தநாளுக்கு தன்னை சந்தித்து வாழ்த்துக்கூற வந்தவர்களில் யாரேனும் ஒருவர் மூலம் தொற்று பரவியிருக்குமோ என அஞ்சப்படுகிறது.

தொற்று உறுதி
வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவலை அறிந்து அண்மையில் அவரை சந்தித்த அவரது ஆதரவாளர்களும் கொரோனா பரிசோதனை செய்திருக்கின்றனர். வைத்திலிங்கம் இல்லம் அமைந்துள்ள புதுச்சேரி கந்தப்ப முதலியார் தெருவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications