தயவு செய்து சிகிச்சைக்கு வராதீங்க ப்ளீஸ்.. மே 3 க்கு பிறகு வாங்க..புதுச்சேரி சுகாதாரத்துறை
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வரவேண்டாமென சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றினால் 8 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மாஹேவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 3 பேரில் ஒருவரான மூலகுளம் அன்னை தெரேசா நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரின் 18 வயது மகனுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக புதுச்சேரி அருகே உள்ள அண்டை மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த பலர் வருவதால் கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வரவேண்டாமென சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்குள்ளான 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருடன் தொடர்பிலிருந்த 4 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

மற்றொருவரான மூலகுளம் பகுதியைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு பரிசோதனை செய்ததில், அவருடைய 18 வயது மகன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே அவரை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதித்துள்ளோம். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று 9 ஆக அதிகரித்துள்ளது. எனவே சீல் வைக்கப்பட்டுள்ள மூலகுளம் பகுதியில் இன்னும் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி எல்லைப் பகுதியில் மருத்துவக் காரணங்களை கூறிவிட்டு உள்ளே வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அண்டை மாநிலத்தவர்களால் புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியகோவில் உள்ளிட்ட புதுச்சேரியின் எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவை அமைத்து, இன்னும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளோம். உண்மையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி அளிக்கவும், சாதாரண சிகிச்சைக்கு வருபவர்களை மே 3 ஆம் தேதிக்கு பிறகு வரும்படியும் வலியுறுத்தி திருப்பி அனுப்பி வருகிறோம்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலேயே அந்த பரிசோதனை செய்து வருகிறோம். இனி புதுச்சேரியில் எந்த பரிசோதனை செய்தாலும் ஆர்டிபிசிஆர் கருவி மூலமாகத்தான் செய்வோம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications