புதுவையில் பென்ஷன் பணத்தில் ஏழைகளுக்கு முகக் கவசம்.. சபாஷ் வாங்கும் அரசு ஓய்வு பெற்ற அதிகாரி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது பென்ஷன் பணத்தில் ஏழை மக்களுக்கு முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் ரூபாய் 100 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர்.

முகக் கவசம்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பலரும் பயன்படுத்த வேண்டிய பொருளாக முகக்கவசம் மாறியுள்ள நிலையில், அதன் தேவையைக் கருத்தில்கொண்டு முக கவசத்தின் விலையை உற்பத்தியாளர்கள் கடுமையாக உயர்த்தியுள்ளனர். மேலும் முக கவசங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது பென்ஷன் பணத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக முக கவசங்களை தைத்து வழங்கி வருகிறார்.

உதவி
புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் புதுச்சேரி அரசின் பொதுப் பணித் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ராஜகோபால், கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாக்க தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டுமென எண்ணினார்.

தயாரிக்க
அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு அரசாங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அளித்து வரும் நிலையில், ராஜகோபால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது பயன்படுத்தும் முக கவசங்களை இலவசமாக வழங்க முடிவு செய்தார். இதற்காக தனது பென்ஷன் பணம் முழுவதையும், முக கவசம் தயாரிக்க தேவைப்படும் துணி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து, தனது மனைவி ராணியுடன் சேர்ந்து முக கவசங்களை தைத்து ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

பாராட்டி
பொதுவாக பென்ஷன் பணத்தை பிற்காலத்திற்கு தேவையென சேமித்து வைப்பவர்கள் மத்தியில், தன்னுடைய பென்ஷன் பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்து வரும் ராஜகோபாலின் செயல் பாராட்டுக்குரியதே. தற்போது ராஜகோபாலின் இந்த செயலை புதுச்சேரியில் உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications