சரமாரியாக கேள்விக் கணைகள்.. பதிலே சொல்லாமல் குலுங்கி குலுங்கி சிரித்து சமாளித்த தமிழிசை.. எஸ்கேப்!
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ள தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சிரித்தவாறே சமாளித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்காகவே தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை பேட்டி: இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரிக்கு வந்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு, தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தேன். என் மனசாட்சிப்படி நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். 3 மாதங்கள் கூடுதல் பொறுப்பு என்று சொன்னார்கள். ஆனால், 3 ஆண்டுகள் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஆளுநர் உரையை தமிழில் ஆற்றினேன். இங்கிருந்து செல்வது மனவருத்தமாக இருக்கிறது. மக்கள் சேவைக்காக செல்கிறேன். புதுச்சேரி உடனான தொடர்பு மனதார, உணர்வால் தொடரும். ராஜினாமா செய்தது நானே என் விருப்பத்துடன் எடுத்த முடிவு. ஒரு வருடமாக நான் சொல்லி வந்தேன். ஆளுநர் மாளிகை வசதியானது. தெலுங்கானாவில் 300 ஊழியர்கள், என்னை சுற்றி 5 சேவை பெண்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்வை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருகிறேன். அதில் இருந்தே எனது அன்பை புரிந்து கொள்ளுங்கள்.
மக்கள் சேவைக்காகவே இந்த முடிவு: ஆளுநர் பதவி காலம் இன்னும் உள்ளது. சுய நலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மக்கள் தொடர்பு சேவைக்காக தான் இந்த முடிவு. நான் தமிழகத்தை சேர்ந்தவள். தமிழ் மகள். அதே தமிழ் மகளாகத்தான் இங்கு வந்தேன். அந்நிய மாநிலத்தவராக பார்க்காதீர் என கோரிக்கை வைத்தேன். விருப்பப்பட்டு தான் மக்களிடம் செல்கிறேன்.
எந்த தொகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. நாளை கட்சி அலுவலகத்துக்கு செல்கிறேன். அவர்கள் அறிவிக்கும் முடிவை ஏற்பேன். வசதியான வாழ்வை விட்டு மக்கள் சேவை செய்ய மீண்டும் போகிறேன். மக்கள் புரிந்துகொள்வார்கள். மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்க முடியாது. மக்கள் பணி தொடரும். பிரதமர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே வேண்டுகோள். அதுதான் என் ஆசை. “வேண்டும் மோடி- மீண்டும் மோடி ஸ்லோகனை தந்தது நான்தான்” என்று தெரிவித்தார்.
ஆளுநர் ரவி பீகார் மாநிலத்தில் தேர்தலில் நிற்கப் போகிறார்.. அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர் ரகுபதி!
சிரித்தே சமாளித்த தமிழிசை: தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழிசை சௌந்தரராஜனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மக்கள் அனைவரும் தன்னை விரும்புவதாக கூறும் நீங்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் தோற்றது ஏன்?, எந்த தொகுதியில் நிற்க போகிறீர்கள்? எதை முன்வைத்து வாக்கு சேகரிப்பீர்கள்?, மக்கள் தொடர்பே இல்லாத நீங்கள் டெபாசிட் இழந்து விடுவீர்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே? என செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.
செய்தியாளர்களின் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், குலுங்கி குலுங்கிச் சிரித்தபடி இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன். வாயே திறக்காமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த தமிழிசை, “சிரிப்பை தவிர எதையும் பதிலாக சொல்ல விரும்பவில்லை. என்னிடம் கேள்விகளை கேட்டுவிட்டு பதிலை மாற்றிப் போடுவீர்கள்.” எனக் கூறிவிட்டு உடனே எழுந்து சென்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications