தமிழகத்தின் கபில் மிஸ்ரா எச்.ராஜாதான்... குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க.. திருமாவளவன்
எச்.ராஜாவை கைது செய்ய திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்
புதுச்சேரி: தமிழகத்தின் கபில் மிஸ்ரா எச்.ராஜாதான் என்பதை மறைமுகமாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் வன்முறையை தூண்ட திரும்ப திரும்ப எச் ராஜா பேசிவருகிறார். என்றும், உடனடியாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் திருமா கோரிக்கை விடுத்துள்ளார்.
எப்படி ப.சிதம்பரம் என்றால் கொந்தளித்து விடுவாரோ, அதேபோல திருமாவளவன் என்றாலும் எச்.ராஜா டென்ஷன் ஆகிவிடுவார்.
திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரத்துக்கு அடுத்தபடியாக எச்.ராஜா ட்வீட்டில் இடம்பெறுபவர் திருமாவளவன்தான்.. பெயரை கூட பகிரங்கமாக சொல்லாமல் "சரக்கு மிடுக்கு" என்று ஒத்த வார்த்தை சொல்லி விமர்சிப்பவர்தான் எச்.ராஜா. அந்த அளவுக்கு எச்.ராஜா ட்விட்டரில் திருமாவளவன் பிரபலம்!

திருமாவளவன்
ரஜினியை பற்றி திருமாவளவன் 4 நாளைக்கு முன்பு ஒரு கருத்து சொல்லியிருந்த நிலையில், உடனே வந்து பதிவு போட்டவர் எச்.ராஜாதான்.. "இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர், எல்லாம் தமிழகத்தின் தலைவிதி" என்றார்.

ட்வீட்கள்
அதேபோல இன்னொரு விவகாரத்திலும் "சிவன், பெருமாள் கோயில்களை இடிப்பேன், தகர்ப்பேன் என்று பேசிய அன்றே திருமாவளவனை கைது செய்திருக்க வேண்டும்.. ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன்.." என்றார் எச்.ராஜா.. இப்படி பல உதாரணங்களை சொல்லி கொண்டே போனாலும் 2 நாளைக்கு முன்பு தஞ்சையில் பேசிய திருமாவளவன், "எச்.ராஜாவெல்லாம் என்னை பத்தி பேசறாரு.. நான் கேட்கிறேன், நீ யாரு.. எங்கிருந்து வந்திருக்கே? என் கலர் என்ன? உன் கலர் என்ன? என் கலர் இந்த மண்ணின் கலர்" என்றார்.

மிரட்டல்
இந்நிலையில்தான் சமீப காலமாக சிஏஏ தொடர்பான எச்.ராஜாவின் கருத்துக்களும், ட்வீட்களும் காரசாரமாக இருந்து வருகின்றன.. சில சமயம் மிரட்டல், சில சமயம் எச்சரிக்கை, சில சமயம் நியாயம் உள்ளதாகவும் அந்த ட்வீட்கள் உள்ளன. இதை பற்றி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எச்.ராஜா குறித்தும் ஒரு கருத்து சொல்லி உள்ளார்.

கபில் மிஸ்ரா
"சிஏஏ போராட்டங்களை குலைக்க ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு பேரணி என்ற பெயரில் மதவெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் மீது கேஸ் போட வேண்டும் என்று ஹைகோர்ட் சொல்லியும் இன்னமும் வழக்கு போடாமல் உள்ளது.

எச் ராஜா
டெல்லியில் நடந்தது போலவே தமிழகத்திலும் வன்முறை வெடிக்கும் என்று எச்.ராஜா வெளிப்படையாக சொல்கிறார்... இப்படி அவர் பேசியதற்கு தமிழக அரசு அமைதி காத்துவருகிறது. கபில் மிஸ்ரா பேசியதால் டெல்லியில் எப்படி வன்முறை வெடித்ததோ அதுபோல தமிழகத்தில் வன்முறையை தூண்ட திரும்ப திரும்ப எச் ராஜா பேசிவருகிறார்... அவர் மீது உடனே வழக்கு பதிய வேண்டும்.. உடனடியாக குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும்" என்றார்.
தமிழகத்தின் கபில் மிஸ்ரா எச்.ராஜாதான் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ள திருமாவளவனின் இந்த பேட்டியும், கருத்தும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications