சூத்திரன் பேச்சு- ஆ.ராசாவுக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம்- புதுச்சேரியில் நாளை மனுதர்மம் எரிப்பு!
புதுச்சேரி: இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களை சூத்திரர்கள்- விலைமாது மக்கள் என்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை பஞ்சமர் என்றும் வரையறுத்துள்ள மனுதர்மம் அல்லது மனுஸ்மிருதி நூலை எரிக்கப் போவதாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மூத்த திமுக தலைவர் ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.
மனுஸ்மிருதி அல்லது மனுதர்மத்தில் சொல்லப்பட்ட கருத்தை மேற்கோள்காட்டியே ஆ.ராசா பேசியிருந்தார். இதே கருத்தை தந்தை பெரியார் உள்ளிட்டோர் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் பேசி உள்ளனர். ஆனால் இந்துக்களை ஆ.ராசா புண்படுத்திவிட்டதாக வலதுசாரிகள் பொங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் ஆ.ராசாவின் பேச்சை முன்வைத்து வன்முறையை தூண்டும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பது, போலீசாரை தாக்குவது என அடாவடியில் வலதுசாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஆ.ராசாவின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளனர். ஆ.ராசா மீதான தாக்குதல் நடந்தால் நிலைமை மோசமாகும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் நாளை இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களை சூத்திரர்கள்- விலைமாது மக்கள் என்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை பஞ்சமர்; பெண்களை விபச்சாரிகள் என்கிற மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டத்தை நடத்தப் போவதாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர். புதுச்சேரி காமராஜர் சாலை ராஜா திரையரங்கம் அருகே இந்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது. இதே காரணங்களுக்காக தமிழகத்தில் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டங்கள் காலந்தோறும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 1927-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரும் மனுதர்ம நூலை எரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications