பெயரோ அறிவழகன்.. புதுச்சேரியில் ஏற்கனவே திருடிய வீட்டிற்கு போய்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே திருடன் ஒருவர், மது போதையில் ஏற்கனவே திருடிய வீட்டிற்கே சென்றுள்ளார். அவரை ஏற்கனவே வந்த திருடன் என கண்டுபிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்துடன் போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள தொண்டமா நத்தம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த 44 வயதாகும் லோகநாதன், தனியார் பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல், லோகநாதன் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். ஆசிரியர் வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டிற்கு மர்ம ஆசாமி ஒருவர் வந்து சென்றுள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து லோகநாதன் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.45 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கூச்சலிட்டார். இதனிடையே ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் திருடன் புகுந்து திருடிய சம்பவம் பற்றி அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி விட்டனர்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் மது குடித்து விட்டு வழி தெரியாமல் அந்த திருடன், ஏற்கனவே கைவரிசை காட்டிய ஆசிரியரின் வீடு முன்பே வந்து நின்றுள்ளான்.. அவனை உடனடியாக அடையாளம் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் இவன்தான் திருடன்... எனக்கூறி மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தொடர்ந்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேரில் வந்து திருடனை அழைத்து சென்றனர்.
திருடனிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது. அறிவழகன் மீது கோட்டக்குப்பம், ஆரோவில் மற்றும் தமிழக பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது..
தற்போது விழுப்புரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் அறிவழகன் கையெழுத்து போட்டு வந்துள்ளளார்.. அவர் வரும் வழியில் பூட்டி கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.. அப்படித்தான் ஆசிரியர் லோகநாதன் வீட்டில் திருடியவர், மீண்டும் மதுபோதையில் அதே பாதையில் வந்த போது சிக்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வில்லியனூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்கு பதிந்து அறிவழகனை கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதன் பின்னர் போலீசார் புதுச்சேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி அறிவழகனை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications