போலீஸ் - ஹோட்டல் ஓனர் வாக்குவாதம்.. சிலிண்டரைத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆரோவில்லில் சாலையோர உணவகத்தில் ஏற்பட்ட சண்டையில் போலீசார் சிலிண்டரை தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். ஆரோவில் அழகை ரசிப்பதற்கும், அமைதியை தேடியும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரகணக்கானோர் தினந்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

இதனால் ஆரோவில் மற்றும் ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பெரும்பாலான உணவகங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்களுக்காக இரவு நேரத்தில் உணவகத்தை குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில் ஆரோவில் அருகே புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பட்டானூர் என்னுமிடத்தில் கணேச மூர்த்தி என்பவருக்கு சொந்தமான சாலையோர உணவகம் ஒன்று இரவு 11 மணியை கடந்தும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற, ஆரோவில் காவல்நிலைய பெண் ஆய்வாளர் மகேஷ்வரி, உதவி ஆய்வாளர் ஜான்ஜோசப் உள்ளிட்ட போலீசார், இரவு நேரத்தில் கடை செயல்படக்கூடாது என எச்சரித்து, கடையை மூடுமாறு கூறியுள்ளனர்.
இதனால் கடை உரிமையாளருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உதவி ஆய்வாளர் ஜான்ஜோசப் கணேச மூர்த்தியின் தாயை ஒருமையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் கடையில் இருந்த சிலிண்டர் தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது கடையின் உரிமையாளர் கணேச மூர்த்தி போலீசாரை பார்த்து, ரோந்து செல்லும்போதெல்லாம் உங்களுக்கு காசு வாங்காம சாப்பாடு கொடுத்தோம். இப்ப ஏன் இப்படி பன்றீங்கன்னு கேள்வி எழுப்பினார். இதனால் சண்டை மேலும் முற்றியது.
போலீசாருக்கும், கடை உரிமையாளருக்கும் நடந்த சண்டையை கடைக்கு உணவு சாப்பிட வந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications