கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமி.. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் கழித்து அதிசயம்
புதுக்கோட்டை: விஷ பாம்புகளால் கடிக்கப்பட்டால், பொதுவாக 30 முதல் 40 நிமிடங்களுக்குள் மருத்துவ உதவி பெறுவது அவசியம் என்பார்கள்.. அதாவது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்வது மிகவும் முக்கியம். புறநகர் பகுதிகளில், தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்கள் பாம்புக்கடிக்கு ஆளானால், அவர்களுக்கு உடனடி மருத்துவம் கிடைக்காமல் எத்தனையோ பேர் உயிரிக்கும் சோகம் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
மழைக்காலம் என்றாலே குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் தொல்லை அதிகமாகிவிடும்.. வெள்ள நீரிலேயே மிதந்து பாம்புகள் வீட்டுக்குள்ளேயே வந்துவிடும் அபாயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

4 வகையான விஷ பாம்புகள்
பாம்புகளில் பலவகையிருந்தாலும், மனிதனை அச்சத்துக்கு உள்ளாக்குவது 4 வகையான பாம்புகள்தான். குறிப்பாக வயல்வெளிகளில், நெல் குடோன்களில் உள்ள எலிகளை அதிகம் வேட்டையாடக்கூடிய கண்ணாடி விரியன் பாம்புகளை சொல்லலாம். இந்த பாம்பு கடித்துவிட்டால் ரத்தம் உறைதலை தடுத்து, சிறுநீரகத்தையும் செயலிழக்க செய்துவிடும்.
அதேபோல மனிதர்களை கண்டால் முன்கூட்டியே படமெடுத்து எச்சரிக்கும் நல்ல பாம்புகள், யாராவது நெருங்கினால் கடித்துவிடும். இந்த பாம்பு கடித்தாலும் நரம்பு மண்டலம், தசைகள், நரம்புகள் என மொத்தமே பாதிக்கப்பட்டு, மூச்சு திணறல்ஏற்பட்டு மரணமே ஏற்பட்டுவிடும்.
அதேபோல மலை அடிவாரங்களிலும், விவசாய நிலங்களிலும் சுருட்டை விரியன் பாம்புகளால் ஏராளமனோர் பலியாகிறார்கள்.,. இந்த பாம்பு கடித்தால் ரத்தம் உறைவதை தடுத்து, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
ஆபத்தான கட்டு விரியன் பாம்புகள்
இதில் ஆபத்தானது கட்டுவிரியன் பாம்புகளாகும்.. பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியில் வரும் கட்டுவிரியன் பாம்புகள் கடித்தால், கொசு கடிப்பது போன்றுதான் தெரியுமாம். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மரணம் வரை கொண்டுபோய்விடும். கட்டுவிரியன் பாம்பு கடித்தால், கண் இமைகள் கனப்பது, பார்வை இரட்டையாவது, பேச்சு குழறுவது, உடல் பலவீனம் போன்றவை ஏற்படும்.
முக்கியமாக நரம்பு மண்டலம் தான் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மண்ணீரல் சேதாரமாவது, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளையும் தந்துவிடும். இதற்கு காரணம், எலி, தவளைகள் நாம் பயன்படுத்தும் ரசாயன உரங்களையே உணவாக சாப்பிடுகின்றன. இவைகளை உணவாக பாம்புகள் சாப்பிடுவதால், பாம்புகளின் விஷத்திலும் கொடூர மாற்றம் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
கட்டுவிரியன் பாம்பு
இவ்வளவு ஆபத்தான கட்டுவிரியன் பாம்பு, புதுக்கோட்டையில் ஒரு சிறுமியை கடித்து, மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது குலவைப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் பழனி, பாப்பாத்தி தம்பதியரிரன் 6 மகள் மதுஸ்ரீ.. இந்நிலையில், மதுஸ்ரீக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. கண்களை அவரால் திறக்கவே முடியவில்லை. இதனால் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்த நிலையில், சிறுமி மிகவும் அவதிக்கு ஆளானார்.
இதனால் பதறிப்போன பெற்றோர், சிறுமியை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால், சிறுமிக்கு உடலில் என்ன நடந்தது என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை
இதனால் 24க்கு மணி நேரம் கழித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை தூக்க சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ குழுவினர், கட்டுவிரியன் பாம்பு சிறுமியை கடித்திருப்பதாகவும், அந்த வகை பாம்பு கடித்தால்தான் இது மாதிரியான பாதிப்புகள் வரும் என்றும் சொல்லி உள்ளனர்.
பிறகு உடனடியாக விஷ முறிவு மருந்து தந்து, சிகிச்சையையும் ஆரம்பித்தனர். ஒரு வாரத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது.
சபாஷ் டாக்டர்கள் - ஆச்சரியம்
தன்னுடைய மகள் உயிர் பிழைத்துவிட்டதை அறிந்து, சிறுமியின் தாய் கண்ணீர் மல்க டாக்டர்களுக்கு நன்றி சொன்னார்.. பொதுவாக, விஷ பாம்புகளால் கடிக்கப்பட்டால், பொதுவாக 30 முதல் 40 நிமிடங்களுக்குள் மருத்துவ உதவி பெறுவது அவசியம். ஆனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்வதுதான் மிகவும் முக்கியம்.
ஆனால், கொடிய விஷமான கட்டுவிரியன் பாம்பு கடித்து, 24க்கு மணி நேரம் கழித்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும், மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றியது, புதுக்கோட்டையின் கவனத்தை பெற்றுள்ளது.. சிறுமியை உயிர் பிழைக்க செய்த அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications