தண்ணீரில் மலம்.. வேங்கைவயல் கொடூரம்! ஃபாரன்ஸிக் சோதனையில் திடீர் ட்விஸ்ட்! போலீஸ்காரரிடம் விசாரணை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த காவலர் ஒருவரிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று அந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.
கொடூர சம்பவம்: சாதிய வன்மம் நிறைந்த இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறிய நிலையில் இந்த வழக்கு வெள்ளனூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக வெள்ளலூர் காவல்துறையினர் சுமார் 75 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வழக்கில் முன்னேற்றமில்லை: மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டு வேங்கை வயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 150 நபர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றமும் விசாரணை ஆணையத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைத்தது.
குற்றவாளிகள் சிக்கவில்லை: ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. டிஎன்ஏ சோதனை, குரல் மாதிரி பரிசோதனை வரை சென்று விட்ட நிலையில் தற்போது வரை அதாவது பதினைந்து மாதங்களாகியும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த அந்த கயவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 15 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் இதுவரை சிக்காத நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த காவலர் ஒருவரிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
காவலர்: புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து தற்போது மணல்மேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் சென்னையில் உள்ள ஃபாரன்சிக் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மணல்மேல்குடி காவலருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
குற்றவாளிகள்: இதையடுத்து புதுக்கோட்டை சிபிசிஐடி காவல் அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் டிஎஸ்பி கல்பனா தத் உள்ளிட்ட காவல்துறையினர் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்பாக விஏஓ வசந்தகுமார் சான்று அளித்துள்ளார். இதை அடுத்து அந்த காவலர் புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் "காவலரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு இருப்பதாகவும்.. அதை வைத்து விசாரணை முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.. தொடர்ந்து விசாரணையை முடிப்போம் எனவும் நடைபெறும்.. மேலும் சிலருக்கு தேவைப்பட்டால் சம்மன் அளித்து விசாரணை நடத்துவோம்.. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என டிஎஸ்பி கல்பனா தத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications