செங்கோட்டையனுக்கு யாரும் நாகரீகம் சொல்லி தரத் தேவையில்லை.. சீனுக்குள் வந்த டிடிவி தினகரன்!
புதுக்கோட்டை: நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் அண்ணன் செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் நேரடியாக செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாக நடந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கூட செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதற்கு மாறாக சபாநாயகரின் அறையிலேயே அமர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, ஏன் என்னை சந்திப்பதை தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று பதில் அளித்து பரபரப்பை கிளப்பினார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையிலான மோதல் உறுதியாகியது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்க மறுத்தார்.
அதுமட்டுமல்லாமல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன் பேசுகையில், இக்கட்டான சூழ்நிலையில் உங்களுடன் உரையாற்றுகிறேன். ஒரு வார்த்தை தவறாக பேசிவிட்டாலும், அது எப்படி வரும் என்பதை நன்றாக அறிவேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. பல வேடிக்கை மனிதர்களை போல் மட்டும் வீழ்ந்துவிட மாட்டேன் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டி பேசினார். இதற்கு அதிமுகவின் வைகைச் செல்வன் கடுமையாக சாடியுள்ளார். அதில், செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும். அதைவிடுத்து பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது அநாகரீகமான செயல் என்றும் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமியை விடவும் சீனியரான செங்கோட்டையனின் செயலை அநாகரீகமானது என்று விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சீனுக்குள் வந்துள்ளார். டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் அண்ணன் செங்கோட்டையனுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அவர்களின் புகைப்படம் பாராட்டு விழாவில் இல்லாதது செங்கோட்டையனுக்கு வருத்தம் அளித்துள்ளது. செங்கோட்டையனை தூண்டுவிடுவதற்காக இதனை கூறவில்லை. அதிமுக வலுவடைய வேண்டும் என்று 90 சதவிகித தொண்டர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications