சித்தாந்தம் காரணமல்ல.. அரசியல் வாய்ப்புக்காக அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.. கார்த்தி சிதம்பரம்!
அரசியல் வாய்ப்புகாகவே அண்ணாமலை பாஜகவில் இணைந்ததாக கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அதிமுக வலுவான கட்சி என்று கூறிய கார்த்தி சிதம்பரம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் வரை மக்கள் அதிமுகவையும் நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அரசியல் வாய்ப்புக்காகவே அண்ணாமலை பாஜகவில் இணைந்ததாகவும், அக்கட்சியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இணையவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணாமலை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.
அதன் பின் பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்பதற்காக அவரது கிராமத்திற்கு வந்து, ஆட்டுக்குட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.

அண்ணாமலை பற்றி கருத்து
ஆனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. வேறு வழியில்லாமல் அரசியல் வாய்ப்புக்காக பாஜகவில் இணைந்தார். பாஜகவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு அண்ணாமலை கட்சியில் சேரவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கு, அதிமுக என்பது என்னை பொறுத்தவரை பலமான, வலுவான அரசியல் கட்சி. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வலுவானது. அதிமுகவிற்கு தமிழ்நாடு முழுவதும் கட்சி கட்டமைப்பு உள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி
ஆனால் பாஜகவுடன் இருக்கும் வரை அதிமுகவையும் மக்கள் நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள். தற்போது அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். சசிகலா பற்றிய எனது கணிப்பு தவறாக சென்றுள்ளது. அவருக்கு துணிச்சல் இல்லை என்று தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி தடை
தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி தடை மசோதா பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மியை ஒரு மாநிலத்தில் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு தேசிய அளவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆன்லைன் ரம்மியை கட்டுப்படுத்த முடியும். இணையத்தில் பிரத்யேகமாக ஒரு செயலியை மட்டும் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்ந்து தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி பற்றிய கேள்விக்கு, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தலைவர்கள் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை பேசி வருகிறார்கள். அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடனான பிரச்சனை காரணமாக, எங்களுக்கு கூட்டணி வைப்பதில் தயக்கம் உள்ளது. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது நாடாளுமன்றத் தேர்தலின் போது மாறும் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பதவி
பின்னர், மாணவர்கள் தேர்வுக்கு வராதது பற்றிய கேள்விக்கு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான தகவல். மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணம் குறித்து அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் என்றார். பின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி பற்றிய கேள்விக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி என்பது நியமன பதவி தான். அதனை தலைமை எனக்கு கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications