அண்ணாமலை சொல்வது வேத வாக்கா? அரசியல் செய்ய புழுதி வாரித் தூற்றுகிறார்.. திருநாவுக்கரசர் சாடல்!
புதுக்கோட்டை : யாராக இருந்தாலும் அவர்கள் வரம்புக்குள் பேச வேண்டும், பிரிவினையை தூண்டும் விதத்திலோ அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ பேசக்கூடாது என காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று திருச்சி எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் அண்ணாமலை அரசியல் செய்வதற்காக பிறர் மீது புழுதி வாரித் தூற்றி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

அளவோடு இருக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், "அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளாக இருக்கட்டும், மடாதிபதிகள், ஆதீனங்கள் என யாராகவும் இருக்கட்டும். அவரவர்களுக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதேபோல் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உரிமை உள்ளது. அதனால் அவரவர் அவரவர் அளவோடு இருக்க வேண்டும்.

பிரிவினையை தூண்டக் கூடாது
மடாதிபதிகள் வாயை திறக்கக் கூடாது பேசக்கூடாது என்று சொல்லவில்லை. கருத்து சொல்லலாம்; பேசலாம். மடாதிபதியோ தேவாலயம், பள்ளிவாசல், இந்து மதக் கோயில்கள் சம்பந்தப்பட்ட மதத் தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர்கள் பாராட்டி கொள்ளலாம். அவர்கள் மதத்தை புகழ்ந்து கொள்ளலாம். ஆனால் பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்திலோ மற்ற மத நம்பிக்கையை உடைக்கும் விதத்திலோ அதன் மூலமாக மதப் பிரச்சினையையோ பிரிவினையையோ தூண்டும்படி பேசக்கூடாது.

மதுரை ஆதீனம்
அவர்களது பேச்சு மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி புண்படுத்தும் விதத்திலோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியோ இருக்கக் கூடாது. மடாதிபதிகள் அமைதியை நிலைநாட்டக் கூடியவர்கள். அவர்கள் அவர்களது வரம்புக்குள் பேச வேண்டும். மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி, எந்த ஆதினமாக இருந்தாலும் சரி அவர்களை மதிக்கிறோம். அரசும் அவர்களை மதிக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை இல்லை. அண்ணாலை சொல்வது வேதவாக்கா என்ன? அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் அரசியல் செய்வதற்காக மற்றவர்கள் மீது புழுதி வாரித் தூற்றி வருகிறார் என திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கை
தொடர்ந்து பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து வரும் 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தான் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது. கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கேரளா முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக குற்றவாளி கூறும் வாக்குமூலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications