எங்கள் அரசு ஊழியர்கள்.. மீண்டும் திராவிட மாடல் பார்ட் 2 வரும்.. தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி பெருமிதம்
புதுக்கோட்டை: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாஜக காணாமல் போய்விடும். எங்கள் தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைப்பார்.. திராவிட மாடலின் பார்ட் 2 தொடரும் என்று தமிழக அமைச்சர் ரகுபதி உறுதி தெரிவித்துள்ளார்.. மேலும் வேலைக்காக தமிழநாட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்று, வாக்களிக்கும் உரிமை குறித்தும் பேட்டி ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை திமுக எப்போதுமமே ஏற்றுக்கொள்ளது.

ஆதார் வைத்திருப்பவர்கள்?
ஒருவரை இந்திய குடிமகனா? இல்லையா? என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியை இவர்களுக்கு தந்தது யார்? ஆதார் வைத்திருப்பவர்கள் இந்திய குடிமகன்கள் தானே? அப்பறம் எதுக்காக தேர்தல் ஆணையம் ஆதாரை ஏற்க மறுக்கிறார்கள்?
இலங்கை தமிழர்களுக்கு நாம் வீடு, ரேஷன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது.
ஒரு வாக்காளர் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது இந்திய குடியுரிமை சட்டம் 1955. ஆனால் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
வெளிமாநில தொழிலாளர்கள்
பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று இவர்களின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடிக்கணக்கில் வந்துள்ளது,... இவர்கள் பண்டிகை காலங்களின்போது அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்..
மேலும் ஒரே இடத்தில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களுக்கும் மாறி மாறி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாது. இப்படியிருக்கும்போது, இவர்களுக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தால், அவர்கள் தங்கள் மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப வாக்களிப்பார்கள்.
தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை, ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. நிரந்தரவாசிகளால்தான் வாக்களிக்க முடியும்.
பாஜக காணாமல் போகும்
ஆனால், அவசர அவசரமாக தேர்தல் ஆணையத்திக் கொண்டு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் துணிச்சலுடன் எதிர்த்து வருகிறார்.
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக தேவையில்லாத கருத்துக்களை சொல்லி வருகிறார்.. வரும் 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து பாஜக காணாமல் போகும். திமுகவின் 2.0 ஆட்சி மீண்டும் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள்
தமிழக அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்பொழுது அவற்றை பின்பற்றக்கூடிய சூழ்நிலை வருகிறது. எப்படிப்பட்ட ஆணைகளை தேர்தல் ஆணையம் சொல்லும் என்பது தெரியாது. தேர்தல் ஆணையம் தவறான விஷயங்களை சொல்லிவிட்டால் அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும்.
விஜய் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் மத்தியில் திமுக மீது எந்த ஒரு வெறுப்பும் இல்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் போது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications