பதவி போனாலும் 4 பேர் நம்மை மதிப்பது போல் நடந்துக்கணும்! இது தான் என் பாலிசி! -அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை: பதவி போனாலும் நம்மை 4 பேர் மதிப்பது போல் நடந்துகொள்ள வேண்டும் என்பது தான் தனது பாலிசி என பேசியிருக்கிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மெய்யநாதனை, அங்கிருந்தவர்கள் ''மாவீரன் மெய்யநாதன்'' என அழைத்தனர். இதனிடையே மைக் பிடித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், தன்னை யாரும் மாவீரன் என்று அழைக்க வேண்டாம் என எடுத்த எடுப்பிலேயே தடை போட்டார்.

சிறப்பு பட்டங்களை சூட்டி தன்னை அழைப்பதை காட்டிலும் மெய்யநாதன் என்று பெயர் சொல்லி அழைப்பதை தான் தாம் விரும்புவதாக கூறினார். ஒரு முறை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்க விரும்புவதாக கூறி சிலர் அணுகினார்கள் என்றும் அவர்களிடம் பட்டமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.
படித்து வாங்குவதற்கு பெயர் தான் டாக்டர் பட்டமே தவிர கொடுத்து வாங்குவது கிடையாது என்றார். பதவி இன்று இருக்கும் நாளை இருக்காது, அதனால் பதவி போனாலும் வீட்டில் இருக்கும் போது 4 பேர் நம்மை மதிக்கும் படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தான் தனது பாலிசி என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
அமைச்சர் மெய்யநாதனின் யதார்த்தமான பேச்சு அவரை மாவீரன் என்று அழைத்தவர்களை சிந்திக்க வைத்தது. புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாது என்பதில் அமைச்சர் மெய்யநாதன் உறுதியாக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications
