பெரியார் திடலுக்கு போன 'தம்பி' விஜய்.. கடும் காண்டான 'அண்ணன்' சீமான்.. செம்ம கோபம் கொப்பளிக்குதே!
புதுக்கோட்டை: தந்தை பெரியார் பிறந்த நாளில் சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் சென்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மரியாதை செலுத்தியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பெரியார்தான் போராடினார் என்றால் எங்கள் முப்பாட்டன்கள் குண்டு விளையாடிக் கொண்டிருந்தார்களா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருந்தார். அத்துடன் திடீரென சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார் நடிகர் விஜய். இது தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: யார் வருவார்.. போவார்? என்றெல்லாம் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நானே இந்த இடத்துக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் எங்கே இருந்தேன் திராவிட அரசியலில்.. என் குடும்பம் எங்கே இருந்தது இந்திய அரசியலில்.. காங்கிரஸில்.. என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது யார் என தெரியும். அப்படி என்கிற போது யார் வருவார்... போவார் என எதிர்பார்க்க முடியாது.
வரலாறு எந்த ஒரு தலைவனின் வருகைக்காகவும் காத்திருக்காது. இவர் வருவார் எனவோ அவர் வருவார் எனவோ யாரும் காத்திருக்கவில்லை. நான் வருவேன் எனவும் காத்திருக்கவில்லை. அதனால தம்பி (விஜய்) எடுத்து வைக்கிற கொள்கை, கோட்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அப்புறம் பேசனும்.
அம்பேத்கருக்கு விஜய் மாலையிடுகிறாரா வரவேற்கிறோம்.. அய்யா பெரியாருக்கு மாலையிடுகிறாரா வரவேற்கிறோம்.. அதைப் போலவே எங்க தாத்தா திருவிகவுக்கும் மாலையிடனும். மறைமலடிகளுக்கும் மாலை போடனும். தாத்தா ரெட்டைமலை சீனிவாசனையும் போற்றனும். ரெட்டைமலை சீனிவாசனுக்கு மார்பளவு சிலைதான் இருக்கிறது.. பெரிய அடையாளம் எதுவும் இல்லைதான். இதை எல்லாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
தாத்தா முத்துராமலிங்க தேவருக்கும் வரனும்.. இம்மானுவேல் சேகரனுக்கும் வரனும்.. தீரன் சின்னமலைக்குப் போடனும்.. பூலித்தேவனுக்கு போடனும்..வேலுநாச்சியார், மருது பாண்டியாரைப் போறனும்..அழகுமுத்துகோன், சுந்தரலிங்கனாரைப் போற்ற வேண்டும்.
நாங்கள் அண்ணல் அம்பேத்கரை அறிவாசான் என்கிறோம். ஆனால் தலைவர்களாக ரெட்டைமலை சீனிவாசன், எம்சி ராஜா, அயோத்திதாசப் பண்டிதராக ஏற்கிறோம். ஏனெனில் தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்.
அதேபோல எங்களுக்கு இன்றைக்கும் பெரியார் வழிகாட்டிதான். பெரியாரை தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவே பார்க்கவில்லை. தமிழ்த் தேசியத்தின் தலைவராகவும் ஏற்கவில்லை. சாதி ஒழிப்பு, தீண்டாமை கொடுமை, பெண் உரிமைக்கு பெரியார் போராடினார். மறுக்கவில்லை. ஆனால் பெரியார்தான் போராடினார் என்பதை ஏற்கமாட்டோம். பெரியார்தான் போராடினார் என்றால் எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் பல்லாங்குழி ஆடிக் கொண்டும் கோலிக் குண்டு ஆடிக் கொண்டுமா இருந்தார்கள்? என்ன விளையாடுறீங்க... அதென்ன பெரியார்தான்.. எங்க முன்னோர்கள் செய்யலையா? வள்ளுவர் ஜாதி ஒழிப்புக்குதானே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்றாரே. இவ்வாறு சீமான் கொந்தளித்தார்.












Click it and Unblock the Notifications