புதுக்கோட்டை நிறைமாத கர்ப்பிணி.. டூவீலரில் டியூட்டிக்கு சென்ற பெண் போலீஸ்.. நொடியில் முடிந்த கொடுமை
புதுக்கோட்டை: இன்று காலையில் பணிக்கு சென்று கொண்டிருந்த பெண் போலீஸ், சாலை விபத்தில் உயிரிழந்தார்.. நிறைமாத கர்ப்பிணியான இவரது மரணம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. சாலை விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிபவர் விமலா.. இவருக்கு 28 வயதாகிறது. தற்போது விமலா நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.

இன்று காலை 9.30 மணிக்கு, குளத்தூர், பள்ளத்துப்பட்டியில் இருந்து, டியூட்டிக்கு கிளம்பி சென்றுள்ளார்.. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் விமலா சென்று கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த கார், எதிர்பாராத விதமாக விமலா மீது மோதியது. இதில், நிலைகுலைந்து விழுந்து, விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போஸ்ட் மார்ட்டம்: இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், விமலாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்திற்கு காரணமான கார் டிரைவரையும் உடனடியாக கைது செய்தனர்.. விமலாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாராம்.. அவருக்கு விமலா உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணி காவலர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின்: இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
"புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிப்புரிந்துவந்த விமலா (வயது 28) க/பெ. மணிகண்டன் என்பவர் இன்று காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து பணி நிமித்தமாக புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த நான்குசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பெண் காவலர் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
பேரிழப்பு: பெண் காவலர் விமலா அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விமலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications