2 பேர் உயிரிழப்பு.. புதுக்கோட்டை உதவி கலெக்டரின் கார் ஓட்டுநர் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உதவி கலெக்டர் ஐஸ்வர்யா சென்ற கார் மோதி வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக இறந்தனர். முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை வடமாநில இளைஞர்கள் முந்தி செல்ல முயன்ற போது விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் உதவி கலெக்டர் மற்றும் அவரது டிரைவர் ஆகியோரும் காயம் அடைந்து மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சாலையில் செல்லும் போது, சற்று கவனம் இல்லாமல் போனாலும் எதிரே வருபவர்களால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறுகிய சாலைகளில் முன்னால் மெதுவாக செல்லும் அரசு பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் முந்தி செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் பெரும்பாலான விபத்துக்கள் சாலைகளில் செல்லும் பேருந்துகள் மற்றும் லாரிகளை முந்தி செல்லும் போது தான் ஏற்படுகிறது.

லாரிகள் மற்றும் அரசு பேருந்துகளை அதிவேகமாக சென்று முந்தி செல்ல முயலும் போது, திடீரென எதிரே வரும் வாகனங்களை கவனிக்காவிட்டால் விபத்து ஏற்படுவது உறுதி. அதேபோல் லாரிகள், அரசு பேருந்துகளை முந்த முயலுவோர் வலதுபுறத்தில் முந்தாமல் இடதுபுறத்தில் முந்த முயலுகிறார்கள். இதன் காரணமாகவும் சில நேரங்களில் அபாயகரமான விபத்துகள் ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்து பற்றி பார்ப்போம்.
புதுக்கோட்டை உதவி கலெக்டராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றி வருபவர் ஐஸ்வர்யா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர் நேற்று காலை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கி அரசு காரில் சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவர் காமராஜ் என்பவர் ஓட்டினார். காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் அடுத்த நமணசமுத்திரம் அருகே உள்ள நகரத்துப்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களான பைசல் மற்றும் பயாஸ் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டு இருந்தனர். வட மாநில இளைஞர்கள், நகரத்துப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் எதிரே வந்த ஆர்.டி.ஓ.வின் கார், பீகார் வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அருகே இருந்த பள்ளத்தில் போய் விழுந்த கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த பைசல் மற்றும் பயாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்கள். மேலும் இந்த விபத்தில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யாவுக்கு லேசான காயமும், அவரது டிரைவர் காமராஜுக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு வாகன ஓட்டுநர் காமராஜர் மீது நமணசமுத்திரம் போலீசார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியது, விபத்து ஏற்படுத்தியது, எதிரே வந்தவர்களை மரணமடைய செய்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications