பஸ் வசதி கூட இல்லாத குக்கிராமத்தில் பிறந்து டிஎஸ்பியாக பொறுப்பேற்கும் சாதனை பெண்.. யார் இந்த பவனியா?
புதுக்கோட்டை : பள்ளிக்கூடம் செல்லவே 5 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ள பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பெண்ணான பவனியா, முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார்.
அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்தில் வசித்து வந்தாலும், அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி எனப் படித்து, தன்னம்பிக்கையோடு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இன்று டிஎஸ்பி-யாக பொறுப்பேற்க இருக்கிறார் பவனியா.
தற்போது டிஎஸ்பியாக பணியில் சேர இருந்தாலும், தனது கனவான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதற்கான விடாமல் படிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் பவனியா.
பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ள பவனியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

குக்கிராமம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமம் கிழக்கு செட்டியாப்பட்டி. இந்த ஊருக்கு காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மட்டுமே பேருந்து வரும். வேறு பொழுதுகளில் பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த கிராமத்திற்கான ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளது.

கூலி வேலை செய்யும் பெற்றோர்
இந்த கிராமத்தில் டீக்கடை நடத்தி வருபவர்கள் வீரமுத்து - வீரம்மாள் தம்பதியர். டீக்கடை வருமானம் மட்டும் குடும்பம் நடத்த போதாததால், கூலி வேலைகளுக்கும் செல்கின்றனர். இவர்களுக்கு 4 மகள்கள். இவர்களில் 3வது மகள் பவனியா. வறுமை நிறைந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், படிக்கும்போதே விவசாய கூலி வேலைகளுக்கும் சென்றுள்ளார் பவனியா.

டிஎஸ்பி ஆகவிருக்கும் பவனியா
பவனியாவின் மூத்த சகோதரிகள் குடும்பச் சூழலால் படிப்பை நிறுத்திவிட்டு, திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையிலும், போராடி கல்லூரி படிப்பு வரை சென்றுள்ளார் பவனியா. இவர் தான் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் பவனியா டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார்.

சைக்கிளில் சென்று பேருந்து மாறி
பவனியா, தங்கள் ஊரில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் ஏ.மாத்தூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 வரை படித்துள்ளார். அதன் பின்னர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் தமிழ் வழியில் படித்துள்ளார். கல்லூரி செல்ல பேருந்து வசதி இல்லாததால், 4 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று அங்கிருந்து புதுக்கோட்டைக்கு பெருந்தில் பயணித்து 3 ஆண்டுகளும் படித்து முடித்துள்ளார் பவனியா.

ஆன்லைனில் படித்து
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே படித்து வென்றபிறகு சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்று வந்துள்ளார் பவானியா. பிறகு கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடக்காததால் ஆன்லைன் வகுப்பில் படித்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் பவனியா.

இலக்கு என்ன?
முதல் முயற்சியிலேயே வென்று டிஎஸ்பி ஆகவிருக்கும் பவானியாவின் கனவு ஐஏஎஸ் அதிகாரி ஆவது தானாம். அந்த இலக்கை அடைய வேண்டும். அதற்காக தொடர்ந்து படித்து வருகிறேன். தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம். எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் என் இலக்கை நோக்கி பயணிக்கிறேன் எனக் கூறுகிறார் பவனியா.

பாராட்டு
அரசு பள்ளி, கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற சாதனைப் பெண் பவானியாவை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சுற்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பலரும் பாராட்டி வருகின்றனர். பவனியா, கிராமப்புறத்தில் இருந்து சாதிக்கத் துடிப்பவர்களின் ரோல் மாடல் ஆகியுள்ளார்.

அமைச்சர் உதவுவதாக உறுதி
தமிழக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பவனியாவை பாராட்டி பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கியதோடு ஐஏஎஸ் ஆகவும் பவானியாவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். மேலும் பவனியா ஐ.ஏ.எஸ் பயிற்சி மேற்கொள்வதற்கான உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications