புதுக்கோட்டையில் கழிவறையில் கணவனை புதைத்த மகாலட்சுமி.. 50 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியைச் சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருகின்றனர். பழனிவேலுக்கு பல ஆண்டுகளாகவே உடலில் கழலை கட்டி நோய் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென பழனிவேலு மாயமானார். அவர் கோவை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதாக மகாலட்சுமி கூறியுள்ளார். 50 நாட்கள் கழித்து உண்மை தெரியவந்துள்ளது.
கணவன் மனைவி இடையே ஏற்படும் தகராறு சில நேரங்களில் மிகப்பெரிய தவறாக போய்விடுகிறது. ஒருவரை ஒருவர் கோபத்தில் தாக்குவது அல்லது பழிவாங்குவது என எல்லை மீறி செல்லும் சம்பவங்கள் குடும்பத்தை அழித்து விடுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மல்லாங்குடி கிராமத்தில் 55 வயதாகும் பழனிவேலு என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமிக்கு 44 வயது ஆகிறது. இவர்களுக்கு தமிழ்செல்வி (25), சாரதா (20) என 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பழனிவேலுவை திடீரென காணவில்லை. இதுகுறித்து அவரது சகோதரி காவிரி, மகாலட்சுமியிடம் கேட்டிருக்கிறாராம். அதற்கு அவர் பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் உள்ளதால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறியிருக்கிறார்.. வெகு நாட்களாகியும் காவிரியால், பழனிவேலுவை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் காவிரியை செல்போனில் தொடர்பு கொள்ளவில்லை. சுமார் 50 நாட்கள் கடந்த நிலையில் காவிரிக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் தனது சகோதரர் பழனிவேலுவை காணவில்லை என்று புகார் கொடுத்தார். மேலும் தனது அண்ணி மகாலட்சுமியிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினாராம். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் மகாலட்சுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணையில். தனது கணவனை கொலை செய்து விட்டு, மகள்களுடன் சேர்ந்து உடலை புதைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.
மகாலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், எனக்கும், பழனிவேலுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், பழனிவேலுவை தாக்கிய போது அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவரது உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறையில் குழிதோண்டி புதைத்தேன். பின்னர் எதுவும் தெரியாமல் இருந்து வந்தேன்.
இதற்கு எனது 2 மகள்களும் உடந்தையாக இருந்தார்கள். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மகாலட்சுமி, தமிழ்செல்வி, சாரதா ஆகிய 3 பேரையும் பழனிவேலுவை புதைத்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து மகாலட்சுமி மற்றும் அவரது மகள்கள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications