திமுக மாவட்டச் செயலாளர் Vs அமைச்சர் ரகுபதி! புதுக்கோட்டையில் புதிய பஞ்சாயத்து! தலைமைக்கு தலைவலி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியனுக்கும் அமைச்சர் ரகுபதிக்கும் இடையேயான உரசல் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
நான்கு சுவர்களுக்குள் பேச வேண்டியதை மேடை போட்டு பேசி கட்சியை பலவீனமாக்க முயற்சிக்கிறீர்களா என இரண்டு தரப்புக்கும் தலைமை டோஸ் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டையை போல் பல இடங்களிலும் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

திமுக மாவட்ட செயல்வீரர்கள்
பூத் கமிட்டி அமைப்பது, திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை இணைப்பது, தொகுதிப் பார்வையாளர்களை நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டந்தோறும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடந்த திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சிக்காரர்களுக்கு சிலர் எதுவும் செய்வதில்லை என அமைச்சர் ரகுபதியை மனதில் வைத்து சூசகமாக விமர்சித்திருக்கிறார் கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர்.

மாவட்டச் செயலாளர்
அந்த சீனியரின் கருத்தை மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் அப்படியே வரவேற்றதால் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ரகுபதி கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். மாவட்ட அமைச்சருக்கு தெரியாமல் வெளியூர் அமைச்சர்களை போய் பார்த்தால் எப்படி காரியம் நடக்கும் என எகிறியிருக்கிறார். பதிலுக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனும் ஏதோ சொல்ல வர, இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அமைச்சர் மெய்யநாதன்
திமுக மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனுக்கும், அமைச்சர் ரகுபதிக்கும் நடந்த வார்த்தைப் போரை மற்றொரு அமைச்சரான மெய்யநாதன் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். இரண்டு பேருமே முக்கியம் என்பதால் நமக்கேன் வம்பு என யாருக்கு ஆதரவாகவும் அவர் வாய் திறக்கவில்லை. திமுகவில் அதிக கோஷ்டிப்பூசல்கள் இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் பிரதான இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிபாரிசு கேட்காதீர்
அமைச்சர் ரகுபதி சில மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டில் ஒட்டிய நோட்டீஸை புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர் மறக்கவில்லை. அதாவது சிபாரிசு கேட்டு நீதிமன்ற வேலைவாய்ப்புக்காக தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்ற நோட்டீஸ் தான் அது. இதனால் தான் கட்சிக்காரர்களுக்கு சிலர் எதுவும் செய்வதில்லை என அமைச்சர் ரகுபதியை மனதில் வைத்து பேசி திரியை கொளுத்தியிருக்கிறார் அந்த சீனியர் நிர்வாகி.












Click it and Unblock the Notifications