Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேங்கைவயல் டேங்க்: “மலம் கலந்த தண்ணீரை யாருமே குடிக்கவில்லை”.. காரசார வாதம்.. நாளை மறுநாள் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: வேங்கை வயல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில், அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப் பத்திரிக்கையில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

vengaivayal court

குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா என பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் அரசு தரப்பில் அறிவியல் சாட்சியங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அந்த குற்றப் பத்திரிக்கையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் தரப்பின் வழக்கறிஞர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு ஆஜராகினர். இரண்டு தரப்பினரும் இன்று விசாரணையின்போது கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பவானி மோகன் வாதிடுகையில், "இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமைகள் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாகத் தான் வேங்கைவயல் சம்பவம் உள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அரசியல் சட்ட பிரிவின்படி அதை ஏற்கக் கூடாது" என வாதிட்டார்.

அப்போது நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரிடம், "நீங்கள் ஏன் இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கியது பற்றி புகார்தாரருக்கு தெரிவிக்கவில்லை" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கு தொடர்பாக தகவல் சொல்வதற்கு நாங்கள் மூன்று முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர்கள் வரவில்லை. வர முடியாது என எழுத்துப்பூர்வமான கடிதத்தை எங்களுக்கு கொடுத்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது" என வாதிட்டார்.

மேலும், "இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று யாரும் இல்லை. மனிதக் கழிவு கலந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட தண்ணீரை யாரும் குடிக்கவில்லை. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த குழந்தைகள் இந்த கழிவு கலக்கப்பட்ட குடிநீரை குடிக்கவில்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். சிபிசிஐடி இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி உள்ளது" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தி, பிப்ரவரி 3ஆம் தேதி (திங்கட்கிழமை) இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+